பதிவு செய்த நாள்
20
ஜூன்
2011
10:06
திருநெல்வேலி : திருமணத்தடை விலக்கும் சாம்பவர்வடகரை சுயம்பு ஸ்ரீமூலநாதர் - மதுரவாணி அம்பாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பழம் பெருமை வாய்ந்த சாம்பவர்வடகரை சுயம்பு ஸ்ரீமூலநாதர்-மதுரவாணி அம்பாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 17ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து கஜ பூஜை, கோ பூஜை, தன பூஜை, மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக பூஜைகள் நடந்தது. காலையும், மாலையும் திருமுறைபாராயணம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. நேற்று காலை கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. காலை 9 மணிக்கு 4ம் கால யாக பூஜை, ஸ்பர்ஸாகுதி, நாடிசந்தானம், திரவ்யாகுதி, யாத்ராதானம், உஹா பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியன நடந்தது. காலை 11 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடந்தது. பின் ராஜகோபுரம், விமானம், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. வேத மந்திரங்கள் ஒலிக்க, நாதஸ்வர மேளதாளங்கள் முழங்கிட, விமானத்தின் மீது கருடன் வட்டமிட பக்தர்களின் சிவசிவ கோஷத்துடன் வேதவிற்பன்னர்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் கருப்பசாமி, கடையநல்லூர் எம்.எல்.ஏ.,செந்தூர்பாண்டியன், தொழிலதிபர் அய்யாத்துரைபாண்டியன், சாம்பவர்வடகரை பஞ்.,தலைவர் மூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.