பதிவு செய்த நாள்
20
ஜூன்
2011
10:06
சிவகிரி : வாசுதேவநல்லூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. வாசுதேவநல்லூரில் பழமைமிக்க வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலானது சடையவர்மன் குலசேகரபாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. இக்கோயிலில் மூலக்கோயில் கருடன் சன்னதி விமானத்தில் கோபுரம், அலமேலு மங்கை தாயார் சன்னதி உட்பட பல்வேறு திருப்பணிகள் செய்விக்கப்பட்டு நிறைவு பெற்றது. கடந்த 17ம் தேதி மாலை 4 மணியளவில் முதற்கால பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 18ம் தேதி காலை 2ம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 11 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு பூஜைகளும், கடம் புறப்பாடும் நடந்தது. 11.30 மணிக்கு பக்தர்களின் "கோவிந்தா என்ற பக்தி கோஷம் முழங்கிட கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீனிவாசபட்டர், வைகுண்டநாதன் நடத்தினர். கும்பாபிஷேகம் தொழிலதிபர் டாக்டர் அருணாசலம் தலைமையில் நடந்தது. விழாவில் அருணாசலம் சாவித்திரி குடும்பத்தினர், நெல்லை தொழிலதிபர் மகேந்திரன், சென்னை தொழிலதிபர் கருணாகரன், குமரவேல், ரத்தன்லால், தயானந்த அகர்வால், பவன்குமார் பன்சால் இந்திரா, வாசு., டவுன் பஞ்.,தலைவர் தவமணி, புளியங்குடி சரக கோயில் ஆய்வாளர் ராமசாமி, செயல் அலுவலர் முருகேசன், ஆஞ்சநேயர் வழிபாட்டு குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் அருணாசலம் தலைமையில் நடந்த அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.