பதிவு செய்த நாள்
25
பிப்
2015
11:02
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக தேரோட்டத்தை முன்னிட்டு, தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவம், நேற்று முன்தினம் துவங்கியது. வரும் 3ம் தேதி தேரோட்டம், 4ம் தேதி மாசி மகம், 5ம் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது. தேரோட்டத்தன்று விநாயகர், முருகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து சுவாமிகள் தேர்களில், தேரோடும் வீதிகள் வழியாக வீதியுலா வந்து அருள்பாலிப்பது வழக்கம். இதற்காக தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, ஆர்.டி.ஓ., செந்தில்குமார் முன்னிலையில் நேற்று துவங்கியது. முதல் கட்டமாக ஆக்கிரமித்திருந்த ஷெட், சாலையின் குறுக்கே செல்லும் மரக் கிளைகளை அகற்றப்பட்டன. சிலர் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ந்து, மணிமுக்தாற்றங்கரையில் பக்தர்கள் வசதிக்கு படிக்கட்டுகளை துõய்மை செய்து, செல்ல ஏதுவாக சாரம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. தேரோடும் வீதியில் இன்று (25ம் தேதி), நாளை (26ம் தேதி) ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடரும் என ஆர்.டி.ஓ., தெரிவித்தார். அப்போது, டி.எஸ்.பி., கார்த்திகேயன், தாசில்தார் மோகன், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கவுன்சிலர் சிங்காரவேல், உதவி பொறியாளர்கள் ஸ்ரீதர், குணவதி, உதவி மின் பொறியாளர் கண்ணன், கட்டட ஆய்வாளர் குணசேகரன், வி.ஏ.ஓ., சந்திரசேகரன் உடனிருந்தனர்.