பதிவு செய்த நாள்
04
மார்
2015
02:03
பவானி : பவானி மக்களின் காவல் தெய்வமாக கருதப்படும் செல்லியாண்டியம்மன் கோவில் மாசி திருவிழா, கடந்த, 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 24ம் தேதி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சியும், 25ம் தேதி செல்லியாண்டியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு, 10.30 மணி முதல், நேற்று மதியம், 12 மணி வரை, மூலஸ்தானத்தில் உள்ள செல்லியாண்டியம்மனுக்கு, ஏராளமான பெண்கள், ஆண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பால், இளநீர், சந்தனம், மஞ்சள் நீர் ஊற்றி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.இதனை தொடர்ந்து, நாளை காலை முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவினை முன்னிட்டு, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள எல்லையம்மன் கோவிலில் இருந்து, செல்லியாண்டியம்மன் கோவிலுக்கு, அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி மற்றும் அதில் பக்தர்கள் தங்கள் உடம்பில் சேறு பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.பவானி மேற்கு தெரு மாரியம்மன் கோவில், வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில், அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கம்பத்துக்கும், அம்மனுக்கும் நீண்ட வரிசையில் காத்து இருந்து, புனித நீர் ஊற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.பாதுகாப்பு பணிகளை பவானி டி.எஸ்.பி., ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டனர்.