பதிவு செய்த நாள்
07
மார்
2015
11:03
திருப்பதி: திருமலை – திருப்பதி தேவஸ்தானத்திற்கு எதிராக, ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருமலை – திருப்பதி தேவஸ்தானம், ஆங்கில புத் தாண்டை முன்னிட்டு, ஆண்டுதோறும், காலண்டர் மற்றும் டைரி விற்பனை செய்கிறது. அதில், திருமலை தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில்களில் உள்ள, உற்சவ மூர்த்திகளின் படம் இடம் பெற்றிருக்கும். இந்நிலையில், ‘ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம மண்டலி’ என்ற அமைப்பின் தலைவர் வேணுகோபாலன், ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில், திருமலை தேவஸ்தானத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.
அதன் விவரம்: நடப்பு, 2015ம் ஆண்டின் டைரியில், தேவஸ்தானம், அர்த்தநாரீஸ்வரரின் படத்தை அச்சிட்டு உள்ளது. திருமலை வைணவ சமயத்தைச் சார்ந்த கோவில். அதில், சிவனின் அம்சமான அர்த்தநாரீஸ்வரரின் படம் வெளியிடுவது தவறு. சிவன் மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் காட்சியளிப்பார். விஷ்ணுவிற்கும், அர்த்தநாரீஸ்வரர் வடிவத்திற்கும் சம்பந்தம் இல்லை. தேவஸ்தானம், இந்த விஷயத்தில் ஆகம பண்டிதர்களின், ஆலோசனை இன்றி செயல்பட்டுள்ளது. இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி, தேவஸ்தானம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.