பதிவு செய்த நாள்
07
மார்
2015
12:03
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி அருகே, அரியானூரில் அமைந்துள்ள மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை (8ம் தேதி) காலை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கடந்த, 2ம் தேதி முகூர்த்தகால் நடப்பட்டது. நேற்று காலை விக்னேஸ்வர பூஜையும், பஞ்சகவ்ய பூஜையும், மாலை முதற்கால யாக வேள்வியும், கும்ப யாக சாலை பிரவேசமும் நடந்தது. இன்று விக்னேஸ்வர பூஜை, விசேஷ சாந்தி, துவாரகபூஜை, 108 மூலிகை பொருட்களால் ஹோமம், புதிய விக்ரகங்களுக்கு கண் திறப்பு, போன்றவை நடக்கிறது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் செய்யப்படுகிறது. நாளை காலை நான்காம் கால யாக பூஜை நடக்கிறது. காலை, 8 மணியில் இருந்து, 8.30 மணிக்குள் கோபுர கலசத்திற்கும், சக்தி மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு தரிசனமும், கோவில் சார்பில் அன்னதானமும் வழங்கப்படுகிறது.