பதிவு செய்த நாள்
09
மார்
2015
02:03
மதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் ராமசாமி ஐயர் தம்பதியருக்குப் பத்தாவதாக ஒரு ஆண் குழந்தை பிறக்கப் போவதாகவும் அவனுக்கு சுப்ரமணியம் என்று பெயர் வை என்றும். வருங்காலத்தில் அன்னையின் ஆசிக்கு அவன் பாத்திரமாவான் என்றும் சொல்லிச் சென்றார் சித்த புருஷரான சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள். சித்தர் சொன்ன மாதிரியே ஆண் குழந்தை பிறந்தது. சுப்ரமணியன் என்று அவனுக்கு பெயர் வைத்தார்கள். வருடங்கள் ஓட ஓட .... சித்தர் வாக்கு பலித்தது. சுப்ரமணியம் தான் பின்னாளில் மாதா புவனேஸ்வரியின் அருள் பெற்ற ஸ்ரீசாந்தானந்த சுவாமிகள். சிறுவனான தியாகராஜன் பின்னாளில் தியாகராஜ பாகவதர் ஆவான் என்று சொன்ன தட்சிணாமூர்த்தி பிள்ளை ஒரு மாபெரும் சித்த புருஷர். ஸ்ரீலஸ்ரீ சின்மயானந்த மவுனகுரு சுவாமி என்பது இவரது திருநாமம். புதுக்கோட்டை ஐயா என்பது பொதுவாக பக்தர்கள் இவரை அழைக்கும் பெயர்.
ராமசாமி பிள்ளை - அமராவதி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். தட்சிணாமூர்த்தி பிள்ளையைச் சிறு வயதிலேயே அடையாளம் கண்டு இவன் பிரபலமாக வருவான் என்று உணர்ந்து அவனை வளர்ப்பதில் உதவியவர் - முத்துவளர்த்தா பிள்ளை என்ற யோகானந்த சுவாமி சிறுவனாக இருக்கும்போது விளையாட்டுத்தனமாகத் தரையிலும் பானையிலும் தட்டிய தட்சிணாமூர்த்தி உரிய வயது வரும்போது ஸ்ரீமான்பூண்டியா பிள்ளை அவர்களிடம் சேர்ந்து வாத்தியக் கலை கைவரப் பெற்றார். சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளுக்கு புதுக்கோட்டை ஐயாவுக்கும் (தட்சிணாமூர்த்தி பிள்ளைக்கும்) நெருங்கிய தொடர்பு உண்டு. ஐயாவை பார்த்த மாத்திரத்தில் அவரது திருவருளை உணர்ந்து ஆசிர்வதித்தவர் மாயாண்டி சுவாமிகள். ஒரு முறை மதுரையில் ஐயாவைப் பார்த்தார் சுவாமிகள். ஐயா புகழ் பெறாத காலம் அது.... நீ பெரிய யோகி குடும்பத்தைச் சேர்ந்தவன். எனவே உலக இன்பத்தில் மயக்கம் கொள்ளாதே என்று அருளினார் சுவாமிகள். அதோடு முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்குச் சென்று அங்கெல்லாம் ஒரு மண்டலம் தங்கி, வழிபாடு செய். ஏழைகளுக்கு இயன்றவரை அன்னதானம் செய் என்று மாயாண்டி சுவாமிகளால் ஆசிர்வதிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை.
சூட்டுகோல் சுவாமிகளின் பிரார்த்தனையை முடித்த பின்தான் ஐயாவின் வாழ்வில் ஒரு பிரகாசம் வீசியது. எண்ணற்ற கச்சேரி வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தன. இதன் பின்னால் தன் காலத்தில் வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் அறுபடை வீடுகளுக்குச் சென்று அங்கே ஒரு மண்டல காலம் தங்கி, முருகப் பெருமானை வழிபட்டு வந்தார். பல நேரங்களில் மவுன விரதத்தை மேற்கொண்டார். அழகன் முருகனிடம் மயங்கினார். ஐயாவை தரிசித்தாலே பழநி முருகப் பெருமானை தரிசித்தது போல் சந்தோஷப்படுவார்கள் பக்தர்கள். அந்த அளவுக்கு முருகனின் திருவருள் பெற்றவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை. மூச்சுக்கு மூச்சு முருகா முருகா என்பார். எங்கு எவரைச் சந்தித்தாலும் ஐயா அவர்களிடம் முதலில் கேட்கிற கேள்வி ஆண்டவனே.... சவுக்கியமா? பெயரும் புகழும் ஐயாவைத் தேடி வந்தன. எத்தனை புகழும் பெயரும் வந்தபோதும். அகந்தையும் கர்வமும் சிறிதும் இல்லாமல் வாழ்ந்தவர் ஐயா. குருபக்தி, தெய்வபக்தி இரண்டையும் இரு கண்களாகக் கருதி வாழ்ந்தார். வாத்திய வாசிப்பில் இவரின் குருநாதர் மான்பூண்டியா பிள்ளை. கலியுக நந்தி லய மேதை என்றெல்லாம் பாராட்டப்பட்டவர் புதுக்கோட்டை ஐயா. மிருதங்கம். கஞ்சிரா-இரண்டிலும் தன் அபாரமான வாசிப்பினால் தனக்கென்று ஓர் இடத்தை ஸ்தாபித்து கொண்டவர். ஸ்ரீமான் தட்சிணாமூர்த்தி பிள்ளை.
தியாகராஜ பாகவதரும் தட்சிணாமூர்த்தி பிள்ளை அவர்களும் சம்பந்தப்பட்ட இன்னொரு நிகழ்வும் சுவாரஸ்யமானது. ஐயாவின் தீர்க்க தரிசனத்துக்கு எடுத்துக்காட்டாக இது விளங்கும். திருச்சியில் இருந்து தம் சிஷ்யர் தட்சிணாமூர்த்தி ஆசாரி வீட்டுக்கு ஒரு முறை ஐயா வந்திருந்தார். அப்போது தியாகராஜ பாகவதர் திருச்சியில் வசித்து வந்தார். ஐயா திருச்சிக்கு வந்திருப்பதை அறிந்த பாகவதர் தம் தந்தையார் கிருஷ்ணமூர்த்தி ஆச்சாரியாருடன் தட்சிணாமூர்த்தி ஆசாரி வீட்டுக்கு வந்தார். ஏற்கெனவே ஐயாவிடம் ஆசி வாங்கிய பாகவதருக்கு இன்னொரு முறை அவர் திருப்பாதங்களில் வீழ்ந்து நல்லாசி வாங்க வேண்டும் என்று ஆசை. ஐயாவின் அருகில் நெருங்கிய பாகவதரின் தந்தையார், இப்ப சங்கீதம் கொஞ்சம் நல்லா கத்துக்கிட்டு வர்றான். ஐயா அவர்கள் என் மகனை ஆசிர்வாதம் செய்யவேண்டும் என்றார். புன்னகைத்த ஐயா, ஒரு உருப்படியைப் பாடச் சொன்னார். பாகவதரும் அட்சரம் பிறாழமல் உருப்படியைப் பாடச் சொன்னார். பாகவதரும் அட்சரம் பிறழாமல் பாடி முடித்தார். பிரதமாதமாகப் பாடுகிறாய் என்று பாராட்டினார் ஐயா. பிறகு ஐயாவுக்குப் பெரிய கும்பிடு போட்டு சாஷ்டாங்மாக நமஸ்காரம் செய்தார் பாகவதர். அப்படி நமஸ்காரம் செய்யும்போது, அவரது பூணுலில் கோத்திருந்த இரும்புச் சாவி தரையில் விழுந்து நங்கென்று ஒலி எழுந்தது. அதைக் கவனித்த ஐயா, பாகவதரின் தந்தையைப் பார்த்து, ஆண்டவனே.... உங்கள் பையனிடம் இருக்கும் இரும்புச் சாவி ஒரு காலத்தில் தங்கச் சாவி ஆகலாம் என்றார் தீர்க்கமாக.
பின்னாளில் ஐயா மறைந்த பிறகு, சென்னையில் ஒரு திரையரங்கத் திறப்பு விழாவுக்கு பாகவதரை அழைத்திருந்தார்கள். அப்போது அவர் கையில் தங்கத்தால் ஆன ஒரு சாவியை கொடுத்து, தியேட்டரைத் திறக்கச் சொன்னார்கள். பிறகு, அந்தத் தங்கச் சாவியை பாகவதருக்கே அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். அப்போது ஐயாவின் நினைவுதான் வந்தது பாகவதருக்கு. இதை அடுத்த ஒரு சில நாட்களில் திருச்சி தட்சிணாமூர்த்தி ஆசாரி வீட்டுக்குச் சென்று, தங்கச் சாவியை அவரிடம் காட்டி, ஐயாவை பற்றிக் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தார் பாகவதர். தட்சிணாமூர்த்தி பிள்ளை அவர்கள் தம் பரிவாரம் புடை சூழ கச்சேரிக்கு வருவதே ஓர் ஒப்பற்ற காட்சியாகும். வி.ஐ.பி-க்கள், சாமியார்கள், சீடர்கள், கூஜா, வாத்தியங்கள், வெற்றிலைப் பெட்டி இப்படி ஒரு மாபெரும் படையுடன் கன் ஜோராக வருவார். பிள்ளைக்கு வெற்றிலை என்றால் அவ்வளவு உயர். அதுவும் தளிர் வெற்றிலையை மட்டுமே இவர் பயன்படுத்துவார். ஒரு முறை தன் பக்தர் ஒருவரின் பிரார்த்தனைக்காக ஐயாவும் பழநிக்கு வந்து தங்கி இருந்தார். இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் பழநியில் தங்கி இருந்தனர். ஐயாவினுடைய பக்தரின் பிரார்த்தனை ரொம்பவும் பரிதாபமானது.
அந்த பக்தர் மும்பையைச் சேர்ந்தவர், வியாபாரியான அவர் மிகப் பெரிய செல்வந்தர். ஒரு கச்சேரிக்காக ஐயா மும்பை சென்றபோது அவரது இல்லத்தில் தங்கினார். ஐயாவை நன்றாக உபசரித்த அந்த பக்தர் ஒரு பிரார்த்தனையை வைத்தார். என் மகனுக்கு வயது ஏழு. ஆனால், அவனால் பேசவோ. நடக்கவோ முடியவில்லை. இத்தனை செல்வம் இருந்தும் என் மகனை இந்தக் கோலத்தில் தினமும் பார்ப்பதற்கு என் மனம் வேதனைப்படுகிறது. எத்தனையோ மருத்துவம் பார்த்துவிட்டேன். கோயில் கோயிலாக ஏறி இறங்கி விட்டேன். பலன் இல்லை. அவனை சரிப்படுத்தித் தாருங்கள். புதுக்கோட்டை ஐயாவே என்று அவரது கால்களில் விழுந்து கதறினார். ஆண்டவனே...... ஆண்டவனே..... என்று பதறிய ஐயா, எழுந்திருங்கள் என்று அவரைத் தூக்கிவிட்டார். பிறகு, தைப்பூச வேளையில் பழநிக்கு வாருங்கள். ஒரு மண்டல காலம் அங்கே தங்கி இருந்து விரதம் அனுஷ்டியுங்கள். தைப்பூச காலத்தில் நானும் பழநியில்தான் இருப்பேன், உங்கள் மகனுக்காக நானும் பிரார்த்திக்கிறேன், கவலைப்படாதீர்கள், ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்று சொன்னார். அதன்படி ஒரு தைப்பூச வேளையில் மும்பையில் இருந்து புறப்பட்டு வந்தது குடும்பம். இப்போது பழநியில் அடுத்தடுத்த இல்லங்களில் அன்பரின் குடும்பத்தினரும் ஐயாவின் கோஷ்டியினரும் தங்கி இருக்கிறார்கள்.
அன்று தளிர் வெற்றிலை வாங்கி வரச் சொல்லித் தன் சீடன் ஒருவனைக் கடைக்கு அனுப்பினார் ஐயா. போனவன் திரும்பி வரும்போது சாதாரண வெற்றிலையுடன் வந்தான். தளிர் வெற்றிலைக்காகக் கடை கடையாக ஏறி இறங்கினேன். எங்குமே கிடைக்கவில்லை ஐயா என்றான். ஆண்டவனே.... இவ்வளவு பெரிய ஊரில் எனக்குத் தளிர் வெற்றிலை கிடைக்க நீ அருளவில்லை போலும். பரவாயில்லை. இருப்பதையே உன் பிரசாதமாக எடுத்துக்கொள்கிறேன் என்று தளிர் வெற்றிலை கிடைக்காத குறையை பழநி முருகனிடமே ஒரு கோரிக்கையாக வைத்தார். தன் அத்யந்த பக்தன் ஒருவன் கோரிக்கை வைத்தால், அதை நிறைவேற்றாமல் விடுவாரா பழநி முருகன்? பழநியில் வெற்றிலைக் கொடிக்கால்கள் நிறைய உண்டு. அப்படி ஒரு கொடிக்காலுக்குச் சொந்தமான பிரமுகர் தீராத வயிற்று வலியால் துடித்து வந்தார். அன்றிரவு அந்தப் பிரமுகரின் கனவில் வந்த முருகப் பெருமான், பழநியில் என் பக்தன் தட்சிணாமூர்த்தி பிள்ளை தங்கி இருக்கிறான். அவனுக்குத் தளிர் வெற்றிலை என்றால், மிகவும் பிடிக்கும் நாளையிலிருந்து தினமும் காலை வேளையில் அவனுக்குத் தளிர் வெற்றிலை கொண்டுபோய்க் கொடு, உன் வயிற்று வலியை நான் குணமாக்கிறேன் என்று அருளினார். கனவிலிருந்து விழித்த பிரமுகர் சந்தோஷமானார். வயிற்று வலியைக் குணமாக்குவதற்குத் தளிர் வெற்றிலைதான் உனக்கு ஃபீஸா? சந்தோஷம் முருகா என்றவர். எப்போது விடியும் என்று பார்த்திருந்து. தளிர் வெற்றிலை பறித்து ஐயா தங்கி இருக்கும் இடத்தை விசாரித்து அடைந்தார். ஐயாவைச் சந்தித்து, தன் கனவு உட்பட எல்லா விவரத்தையும் சொன்னார். நெகிழ்ந்து போனார் ஐயா. ஆண்டவனே தளிர் வெற்றிலைக்காக உன்னை இந்த அளவுக்கு சிரமப்படுத்திவிட்டேனா.... அதுபோல் என்னை நம்பி இங்கு வந்து தங்கி இருக்கும் மும்பைக் குழந்தையையும் குணமாக்கு. அதுவும் உன் பொறுப்புதான் என்று உளமாரப் பிரார்த்தித்தார்.
அதே தினம், மாலை வேளை.... மும்பை வியாபாரியின் மகன், வீட்டு வாசலில் அமர்ந்து தெருவில் கடந்து போகும் பக்தர்கள் கூட்டத்தையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவனால் பேச முடியுமா? நடக்க முடியுமா? இரண்டும்தான் முடியாதே! எனவே, உட்கார்ந்த இடத்தில் இருந்தே அமைதியுடன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது திடீரென இவன் அருகே வந்த சிறுவன் ஒருவன், சுற்றும்முற்றும் பார்த்தான், பிறகு, பொசுக்கென அவனது இடுப்பில் இருந்த தங்க அரைஞான கயிற்றை அறுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தான். வியாபாரியின் மகன் அதிர்ந்தான். பிறகு, அவனைப் பிடிங்க... பிடிங்க.... என அரைஞான கயித்த அறுத்திக்கிட்டு ஓடுறான், பாருங்க... என்று பெருங்குரல் எடுத்து அலறியபடியே. சிறுவனைத் தூரத்திக்கொண்டு தெருவில் வளைந்து நெளிந்து ஓட ஆரம்பித்தான். பிடிங்க.... பிடிங்க என்று தங்கள் வீட்டு வாயிலிருந்து குரல் வருகிறதே.... என்ன ஏது என்று பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த மும்பை வியாபாரியும் அவர் மனைவியும் அதிர்ந்து போனார்கள். குரல் கொடுத்துக் கொண்டே வெகு வேகமாகத் துரத்திப் போகும் தங்கள் மகனைப் பார்த்து மகிழந்தனர். இருவரும் மகனைத் துரத்திக் கொண்டு ஓடினர். தங்க அரைஞான கயிற்றை அறுத்துக் கொண்டு போன சிறுவன் ஒரு கட்டத்தில் அதைத் தரையில் போட்டுவிட்டு மாயமாக மறைந்தான். எங்கு தேடியும் அவன் சிக்கவில்லை. சிக்குவதற்கு அவன் என்ன, ஆறறிவு பாலகனா? அறுபடை வீட்டுக் குமரன் ஆயிற்றே! தட்சிணாமூர்த்தி பிள்ளையின் வாக்குக்கு இணங்க, மும்பை வியாபாரியின் மகனுக்குப் பேச்சைக் கொடுக்கவும், நடமாட வைக்கவும்தானே மலையிலிருந்து அவன் கீழே இறங்கி வந்தான்?
மகனுடன் திரும்பி வந்த மும்பை வியாபாரி குடும்பத்தினர். பக்கத்தில் தியானத்தில் இருந்த தட்சிணாமூர்த்தி பிள்ளையின் பாதங்களில் வீழ்ந்து பணிந்தனர். ஐயா இருந்த இடத்தில் இருந்தபடியே பழநிமலையை அண்ணாந்து பார்த்து, ஆண்டவனே.... உன் திருவிளையாடலே திருவிளையாடல்... நன்றி குமரர் என்று பெருங்குரலெடுத்துக் கூறினார். புதுக்கோட்டை ஸ்ரீமான் தட்சிணாமூர்த்தி பிள்ளை - அதாவது புதுக்கோட்டை ஐயா எப்படி இருப்பார்? ஆறடி உயரம், நல்ல தேகம். அதற்கு தகுந்த பருமனும், மார்பளவும் உடையவர். கண்கள் எப்போதும் பிரகாசமாக இருக்கும். நல்ல குணமுடையவர். தயாள சுபாவம் உண்டு. எப்போதும் கலகலவென்று பேசிக்கொண்டே இருப்பார். ஐயாவின் மிருதங்க வாசிப்பைப் போற்றிப் பாராட்டாத சங்கீத அன்பர்களே இல்லை எனலாம். தனக்கென தனி பாணியை அமைத்துக்கொண்டு இசை ரசிகர்களைக் கவர்ந்தார். சக கலைஞர்களையும் உற்சாகப்படுத்தும் குணம் கொண்டவர். சங்கீதத்தின் துவக்கத்தில் இருக்கின்ற சிறு சிறு பொடியன்களுக்கெல்லாம் விளையாட்டுத்தனமாக அமர்ந்து அவர்களின் வாய்ப்பாட்டுக்கு இனையாக பக்கவாத்தியம் வாசிப்பார்.
தமது தொழிலில் என்றுமே முதல் ஸ்தானத்தில் இருந்தவர். தற்புகழ்ச்சி பொறாமை, இழி குணத்தார் சேர்க்கை, கட்சிப் பூசல் போன்ற எந்த ஒரு நோயும் தீண்டாத தூய மனத்தவர் என்று பாபநாசம் சிவன் அவர்கள் புதுக்கோட்டை ஐயாவைப் போற்றுவார். குழந்தையக இருக்கும் காலத்தில் இருந்தே ஐயாவிடம் சேட்டை அதிகம். தெருவில் ஏதாவது குதிரை வண்டிகள் செல்வதைப் பார்த்துவிட்டால், குதூகலத்தோடு அதன் பின்னே தலை தெறிக்க ஓடுவார். புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் குதிரை வண்டிகளின் சில ஓட்டுநர்கள் சிறுவனின் ஆர்வத்தைக் கண்டு பெருமிதப்பட்டு, அவனை வண்டியில் வைத்துக்கொண்டு சிறிது தொலைவு செல்வார்கள். வண்டி ஓட்டவும் அனுமதிப்பார்கள். அப்போது ஐயாவுக்கு ஏற்படும் மகிழ்ச்சியே அலாதி. விளையாட்டே கதி என்று இருந்தால் படிப்பு எப்படி வரும்? பள்ளிப் படிப்பில் ஐயாவுக்கு நாட்டம் செல்லவில்லை. இதை அறிந்த யோகானந்த சுவாமிகள் (ஐயாவை வளர்த்தவர்) ஐயாவுக்குத் தாமே நேரடியாகப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். காலம் மெள்ள மெள்ள ஓடியது. யோகானந்த சுவாமிகளுக்கு வைத்தியம், ஜோதிடம் நன்றாகத் தெரியும். புதுக்கோட்டை அரண்மனையில் வைத்தியம் பார்ப்பதற்கும் ஜோதிடம் சொல்வதற்கும் யோகானந்த சுவாமிகள் நியமிக்கப்பட்டிருந்தார். அந்தத் தொடர்பின் மூலம் அரண்மனையில் சிப்பாய் வேலைக்கு ஐயாவைச் சேர்த்து விட்டார் சுவாமிகள். ஐயாவும் துப்பாக்கி ஏந்தி ஒரு சிப்பாயாக அரண்மனையில் பணிபுரிந்தர்.
பிரபலமான அரண்மனை என்பதால் அந்தக் காலத்தில் பெரிய பெரிய வித்வான்கள் எல்லாம் இங்கு வந்து கச்சேரி நிகழ்த்தி விட்டுப் போவது வழக்கம். பணியின் இடையே இந்தக் கச்சேரிகளையும் செவி கொடுத்துக் கேட்டு வருவார் ஐயா. மற்ற வாத்தியக்கார்களைப் போல் தானும் ஏதாவது வாத்தியத்தை வாசிக்கவேண்டும் என்கிற உந்துதல் அப்போது எழும் ஐயாவுக்கு. இந்த ஆர்வம் காரணமாக தாள வாத்தியச் சொற்களைத் தான் கையில் வைத்திருக்கும் துப்பாக்கிக் கட்டையில் அடித்துப் பார்த்து வருவார் ஐயா. இந்தப் பழக்கம் தொடர..... மேஜைகள், கதவுகள், பானைகள் போன்றவற்றில் தாளம் போட ஆரம்பித்தார். யோகானந்த சுவாமிகளும் இதைக் கண்டு மகிழ்ந்து இவனுக்கு வாத்தியம் வாசிப்பதில் ஆர்வம் இருக்கிறது. போலும் என்று நெளிந்தார். இப்படித்தான் தட்சிணாமூர்த்தி பிள்ளையின் இசை உலகப் பிரவேசம் துவங்கியது. மிருதங்கம், கஞ்சிரா இரண்டிலும் பிரபலமாகத் துவங்கினார். புதுக்கோட்டை ஐயா தங்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்க மாட்டாரா? என்கிற ஏக்கம் பிரபலமான வித்வான்களுக்கும் ஒரு கட்டத்தில் ஏற்பட ஆரம்பித்தது. இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்துக்கொண்டார் ஐயா. முருகப் பெருமானின் திருவருளால் எண்ணற்ற சித்து வேலைகள் புரிந்தார் ஐயா. பலரது கஷ்டங்களையும் போக்கி அருளினார். இறைவன் இவருள் புகுந்து பல லீலைகளை நடத்தினான் என்றே சொல்லவேண்டும்.
ஆலத்தூர் வெங்கடேஸ்வர ஐயர். அந்தக் காலத்தில் பிரபலமான பாடகர். இவருடைய கச்சேரிகளில் ஐயா பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார். ஒரு முறை குருவிக்கொண்டான்பட்டி என்கிற ஊருக்கு கச்சேரி ஒன்றுக்காக புதுக்கோட்டை ஐயா, வெங்கடேஸ்வர ஐயர் மற்றும் சிலர் புதுக்கோட்டையில் இருந்து ஒரு பேருந்தில் பயணம் செய்தார்கள்.
புறப்பட இருந்த பேருந்தில் டிரைவர் இருக்கையில் இருந்து நான்காவது இருக்கையில் - ஜன்னல் ஓரமாக உட்கார்ந்தார் வெங்கடேஸ்வர ஐயர். ஐயா அதற்கு முன் இருக்கையில் - அதாவது டிரைவர் இருக்கையில் இருந்து மூன்றாவது இருக்கையில் அமர்ந்திருந்தார். வண்டி புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த வேளையில், ஐயா என்ன நினைத்தாரோ தெரியவில்லை... தலையைத் திருப்பிப் பார்த்து வெங்கடேஸ்வர ஐயரின் கையைப் பிடித்து இழுத்து, காலியாக இருந்த அடுத்த இருக்கையில் (ஐந்தாவது வரிசை) அமரச் சொன்னார். புதுக்கோட்டை ஐயாவின் சித்து வேலைகளைப் பற்றி ஓரளவு அறிந்தவர் வெங்கடேஸ்வர ஐயர். எனவே, ஐயா சொன்னதும், ஏன் ஏதற்கு என்று கேள்வி கேட்காமல் சட்டென இருக்கை மாறி அமர்ந்துகொண்டார். பேருந்து புறப்பட்டுப் போன சில நிமிடங்களிலேயே ஒரு பெரிய கல் மீது மோதி நிலை குலைந்தது. இதில், வெங்கடேஸ்வர ஐயர் முன்பு அமர்ந்திருந்த இருக்கையில் (புதிதாக) அமர்ந்திருந்தவரின் மண்டையில் பலத்த அடி. நல்லவேளையாக, இவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த ஐயருக்கு ஒன்றும் ஆகவில்லை. அப்போதுதான் ஐயருக்குப் புரிந்தது. தன்னை ஏன் இருக்கை மாறி அமரச் சொன்னார் என்று!
யோகானந்த சுவாமிகளின் சொன்ன உபதேசத்தின்படி, அவர் சமாதி ஆன இடத்தில் - அதாவது புதுக்கோட்டை நகருக்கு அருகில் அடப்பன்வயலில் ஸ்ரீதண்டபாணி பெருமானுக்கு ஒரு கோயில் கட்டினார் ஸ்ரீமான் தட்சிணாமூர்த்தி பிள்ளை. இந்த இடத்தில்தான் யோகானந்த சுவாமிகள் ஹடயோகம் செய்து வந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, சுவாமிகள் சமாதி ஆன இடத்தில் ஒரு கோயிலும் கட்டினார் ஐயா, தன் சொந்த சம்பாத்தியமான சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் தண்டபாணி திருக்கோயிலையும் சுவாமிகள சமாதித் திருக்கோயிலையும் கட்டி முடித்து அதற்குக் கும்பாபிஷேகமும் செய்து முடித்தார் புதுக்கோட்டை ஐயா.
இந்த ஸ்ரீதண்டபாணி கோயில் பிரதிஷ்டை ஆகி இருக்கிற முருகப் பெருமானது மூலவர் விக்கிரகம் அவ்வளவு அழகானது. மிகவும் தத்ரூபமாக இருக்கும் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளும் புதுக்கோட்டை ஐயாவும் சேர்ந்து போய் ஸ்ரீதண்டபாணியின் இரண்டு விக்கிரகங்களைத் தேர்வு செய்தார்கள். அதில் ஒன்று திருப்பரங்குன்றம் காகபுசுண்டர் மலை உச்சியிலும், மற்றது இங்கேயும் பிரதிஷ்டை ஆகியுள்ளன. ஐயா இருந்த வரை இந்த கோயில் பராமரிப்புக்கு வேண்டிய உதவிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். ஆனால், அவரது காலத்துக்குப் பின் முருகப் பெருமான் கோயிலும், யோகானந்த சுவாமிகளின் சமாதியும் கவனிப்பார் இல்லாமல் போயின.
மாயாண்டி சுவாமிகளுடன் ஏற்பட்ட தொடர்பால், பல ஞானிகளின் தொடர்பு புதுக்கோட்டை ஐயாவுக்கு ஏற்பட்டது. கச்சேரி செய்யும் நாட்கள் தவிர மற்ற தினங்களில் முருகன் அருளும் திருத்தலங்கள் உட்பட பல கோயில்களுக்குச் சென்று இறை இன்பத்தில் மூழ்கினார் ஐயா. மாயாண்டி சுவாமிகளின் உபதேசப்படி அடிக்கடி மவுன விரதம் கடைப்பிடித்து அறுபடை வீடுகளுக்குப் பயணமானார் ஐயா. தவிர, முருகப் பெருமான் எங்கெங்கெல்லாம் குடிகொண்டிருக்கிறாரோ, அங்கெல்லாம் பயணப்பட்டு ஒரு மண்டல காலத்துக்குத் தங்கி வழிபட்டார். அங்கு வரும் பக்தர்களுக்குப் பல உதவிகளையும் புரிந்தார். ஞானிகளின் தொடர்பு பெருகப் பெருக.... ஐயாவின் வாழ்க்கை முறையிலும் மாறுபாடுகள் தெரிய ஆரம்பித்தன. ஐயா எங்கு போனாலும் அவருடன் பல துறவிகளும் இருப்பது வாடிக்கையான ஒன்றாக ஆனது. இந்தக் காலத்தில் ஐயாவின் நித்திரை குறைந்தது. உணவும் குறைந்தது. ஒரு முறை பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் ஐயாவைத் திருச்சியில் சந்தித்தார். ஐயாவிடம் தாது வருடம் நினைவில் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டுப் போனார். ஐயாவும் புன்னகைத்துக் கொண்டார். இதன் பின் இந்த இருவரும் சந்தித்துக் கொள்ளும்போதெல்லாம் பாடகச்சேரி சுவாமிகள், ஐயாவிடம், தாது வருடத்தைப் பற்றி நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார்.
இதன் பின்னர் ஐயாவுக்கு சஷ்டியப்த பூர்த்தி நடந்தது (ஐயாவின் துணைவியார் பெயர் பழனி அம்மாள்) அடுத்த சில நாட்களில் சென்னையில் கோகலே ஹாலில் நடைபெற்ற ஒரு கச்சேரியில் ஐயா மிருதங்கம் வாசித்தார். அப்போது பலரும் பாராட்டும் வண்ணம் தனி ஆவர்த்தனத்தை ஏகத்துக்கும் பிரமாதப்படுத்தி விட்டார். ஆனாலும், ரசிகர்கள் திருப்தி அடையவில்லை. இன்னும் கொஞ்சம் நேரம் தனி ஆவர்த்தனம் வாசிக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகோள் வைத்தனர். ஐயாவும் அதை ஏற்றுக்கொண்டு வாசித்தார். இது முடிந்த பின். இனிச் சென்னைக் கச்சேரிகளுக்கு வரமாட்டேன் இதுதான் என் கடைசிக் கச்சேரி என்று கமறிய குரலில் சொன்னார். ஏன் இப்படிச் சொல்கிறார்? புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு வருவதற்குச் சிரமமாக இருக்கிறதா? ஒருவேளை உடல்நிலை ஒத்துழைக்கவில்லையா? என்று அவரின் ரசிகர்கள் குழம்பினர்.
அதுபோல காக்கிநாடா மற்றும் திருச்சி சபா கச்சேரிகளிலும். இந்த ஊரில் இதுதான் கடைசிக் கச்சேரி என்று சொல்லியே வாசித்தார். பிறகு, நகரத்தார் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வாசிக்கும்போது. இனி இந்தத் தொழிலையே நிறுத்திவிடப் போகிறேன் என்றார். அடுத்து, பூலாங்குறிச்சியில் ஒரு கச்சேரி வாசித்தார். ஏனோ அங்கே அதிகாரம் ஏற்பட்டது. உடனே, அந்தக் கச்சேரியை முடித்துக்கொண்டு புதுக்கோட்டை வந்து சேர்ந்தார். அதன் பின் வெளியூர் கச்சேரிகளுக்குச் செல்வதையும் ஒப்புக்கொள்வதையும் முற்றிலுமாக நிறுத்தினார். புதுக்கோட்டையிலேயே தான் கட்டிய முருகன் கோயில் தியானத்தில் இருப்பதையும், அவ்வப்போது மவுன விரதம் கடைப்பிடிப்பதையும் வழக்கமாகக் கொண்டார். அந்த வேளையில் ஒரு நாள் பாடகச்சேரி சுவாமிகள், கரிவலம் வந்த நல்லூர் பொன்னையா சுவாமிகள் மற்றும் சிலர் புதுக்கோட்டைக்கு வந்து ஐயாவைச் சந்தித்தார்கள். பாடகச்சேரி சுவாமிகளைப் பார்த்துப் புன்னகைத்தார் ஐயா. பிறகு ஐயாவே, நினைவிருக்கிறது. தாது வருடம் வைகாசி மாதம் 13-ஆம் தேதி என்று சொன்னார். பின் தன் குடும்பத்தாரிடத்தில் வைகாசி மாதம் 13-ஆம் தேதி மாலை ஆறரை மணி என்னுடைய நேரம். குறித்து வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.
மகான்களின் வாக்கு பொய்யாகுமா? தான் குறிப்பிட்ட அதே தினத்தில் முருகப் பெருமானை வணங்கினார். பிறகு, தான் வாசித்த பிரபலமான கச்சேரிகளின் இசைத்தட்டுகளை ஒலிக்க விட்டு அவற்றை ஆன்ந்தமாகக் கேட்டு ரசித்தார். மாலை ஐந்தரை மணி ஆகும்போது ஸ்நானம் செய்யச் சென்றார். அனுஷ்டானங்களைச் செய்து முடித்தார்.
மணி 6.25 இன்னும் ஐந்து நிமிடங்களே இருக்கின்றன என்று சொன்ன ஐயா, சில அப்பியாசங்கள் செய்து தரையில் அமர்ந்து கொண்டார். சில ஆசனங்கள் போட்டார். அப்போது நேரம் 6.29 முருகா.... ஆண்டவனே என்று சொன்னவர், தன் மூச்சை இறுதியாக நிறுத்திக்கொண்டார். மிருதங்க உலகில் தனிப் பெரும் சக்தியாக விளங்கிய ஸ்ரீமான் தட்சிணாமூர்த்தி பிள்ளை, அந்த விநாடியில் அடங்கிவிட்டார். அன்று முருகனுக்கு உகந்த சஷ்டி திதி. இந்த வேளையில் யதேச்சையாக புதுக்கோட்டை வந்த பாடகச்சேரி சுவாமிகளே, ஐயாவின் அடக்கத்துக்கு உண்டான காரியங்களைச் செய்தார். என்று சொல்லப்படுகிறது. ஆனால் யதேச்சையாகவா வந்திருப்பார்? ஐயாவின் இறுதி மூச்சு எப்போது அடங்கும் என்பதை முன்கூட்டியே சொன்னவர் ஆயிற்றே பாடகச்சேரி சுவாமிகள்! ஐயாவின் துணைவியாரான பழனி அம்மாள். என் கணவருக்கு உண்டான கிரியைகளை நடத்தவேண்டும்.... என்று பாடகச்சேரி சுவாமிகளிடம் கேட்டதற்கு, ஐயா இன்னும் மரணம் அடையவில்லை. தன் ஜீவனை அடக்கி வைத்திருக்கிறார். அவரது உயிர் இன்னும் ஒரு வருடத்துக்கு இங்கேயேதான் இருக்கும். அதனால் கிரியைகள் எதுவும் கூடாது. தாங்களும் தாலியைத் துறக்க கூடாது என்றார் பாடகச்சேரி சுவாமிகள். ஆனால், இதை அடுத்த எட்டாவது மாதத்திலேயே அந்தப் புண்ணியவதியும் தன் துணைவரின் திருப்பாதங்களை அடைந்தார்.
சங்கீத உலகில் ஒரு ஜாம்பவானாக விளங்கினாலும், சிறந்த மனிதநேயராக - ஆன்மிகவாதியாக - மாபெரும் சித்த புருஷராக - சக கலைஞர்களையும் மதிக்கக்கூடிய ஒரு மனப் பக்குவம் கொண்டவராக வாழ்ந்த ஸ்ரீமான் தட்சிணாமூர்த்தி பிள்ளை, சிறந்த தவயோகி, முருகப் பெருமானின் பரிபூரண அருள் பெற்று அவனது தரிசனத்தைப் பெற்று அனுபவித்தவர்.
நன்றி: திருவடி சரணம்