பதிவு செய்த நாள்
11
மார்
2015
11:03
வேலாயுதம்பாளையம்,மார்ச் 11-கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே வேட்டமங்கலம் பஞ்சாயத்து சங்கோடை குளத்துபாளையம் பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.கரூர் ஒன்றியம், வேட்ட மங்கலம் பஞ்சாயத்து புங்கோடை குளத்துபாளையம் காலனியில் செல்வவிநாயகர், பகவதியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளது. இக்கோவில்கள் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது.விழாவையொட்டி நேற்று முன்தினம், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவிரியாற்றிற்கு சென்று, புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக வந்து ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
பின், விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழாவுக்கான முதல் கால யாக பூஜைகள் தொடங்கியது. மஹா சங்கல்பம், புண்யாகம், வாஸ்து சாந்தி, ரக்க்ஷா பந்தனம், கும்பஅலங்காரம், யந்திரஸ்தாபனம், மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று காலை நாடிசந்தனம், ஸபர்சாகுதி, மூலமந்திர ஹோமங்கள் என இரண்டாம் கால யாகபூஜைகள் நடந்தன.அடுத்து, மகா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு நடத்தப்பட்டு, பகவதியம்மன் கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, பகவதியம்மன் மற்றும் செல்வவிநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.