பதிவு செய்த நாள்
14
மார்
2015
12:03
சிவகாசி: ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும் சிவகாசி முருகன் காலனியில் உள்ள பேச்சியம்மன் கோயிலில் எங்கும் இல்லாத புதுமையாக, கன்னியாகுமரி முதல் கைலாய மானசரோவர் வரை 108 அம்பிகையின் திருஉருவங்களை ஒரே இடத்தில் காணும் வகையில் வடிவமைத்துள்ளது தனிச்சிறப்பு. 60ஆண்டுகளுக்கு முன் சதுரகிரி வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கற்குவியலில் மூன்று துண்டுகளாக இருந்த பேச்சியம்மனை அப்பகுதியில் வாழ்ந்த கமலம்மாள் எடுத்து இணைத்து பூஜைகள் செய்து, சிறுமேடையில் அமரவைத்தார். தினமும் நடந்த பூஜை, சிறப்பு வழிபாடுகளால் பலன் பெற்ற பக்தர்களின் முயற்சியால் தற்போது மூன்றடுக்கு கொண்ட 36 அடி ராஜகோபுர கோயிலாக உள்ளது. காவல் தெய்வங்கள், நவக்கிரககோள அமைப்பு, பஞ்சமுக லிங்கேஸ்வரர், 1008 ருத்ராட்சம் சூழ்ந்த ஆனந்த நடராஜர் சபை என அத்தனை அம்சங்களும் ஒருங்கிணைந்து நெஞ்சை அள்ளும் வகையில் பக்தி பரவசம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது இக்கோயில்.
இங்கு காசி, மதுரா, துவாரகா, பிருந்தாவனம், உஜ்ஜயினி, அயோத்தி, கயா உட்பட புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மண், தீர்த்தங்கள், விக்ரக அம்சங்கள், வஸ்திரங்களும் சேமிக்கப்பட்டுள்ளது. 108 சக்தி பீடங்களை அந்தந்த கோயில் சன்னதி கோபுரங்கள் போலவே வடிவமைத்து உள்ளனர். அதாவது பழங்கால குகை வடிவ கோயில்கள் முதல் பொற்கோயில் வரை அந்தந்த வடிவங்களில் அமைத்துள்ளனர். இவைகளை பஞ்ச பூத தலங்கள், நவரத்ன கோயில்கள், நவ காளி கோயில்கள், நவநதிகளின் ஆலயங்கள், ஏழு யோகசக்கர கோயில்கள் என வகைப்படுத்தி உள்ளனர். இங்கு ஆண்டுதோறும் மாசி விழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.