பதிவு செய்த நாள்
16
மார்
2015
11:03
தர்மபுரி: தர்மபுரியில் நடந்த, பன்னிரு திருமுறை, சிவபூஜை மாநாட்டில், இரண்டாவது நாளான நேற்று, நடந்த ஸ்வாமி திருவீதி உலாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி அப்பர் கைலாய காட்சிக்குழு, கோவை மணிவாசகர் நற்பணி மன்றம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட தெய்வீக ஆன்மிக பேரவை சார்பில், பன்னிரு திருமுறை சிவபூஜை இரண்டாம் மாநாடு, நேற்று முன்தினம் தர்மபுரியில் தொடங்கியது. நேற்று முன்தினம் நடந்த மாநாட்டில் கொடியேற்றம், குத்து விளக்கேற்றுதல் ஆகியவை நடந்தது. மாநாடு தொடர்பான சிறப்பு மலரை சேலம் விஜய் பில்டர்ஸ் பாலசுப்பிரமணியம், விஜய் வித்யாலயா கல்வி நிறுவன தலைவர் மணிவண்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இரண்டாம் நாளான நேற்று காலை, 8 மணிக்கு கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர், காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ஸ்வாமி அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சாஸ்திரங்கள் ஓத, சிவனடியார் திருமுறை பாடி கைலாய வாத்தியங்கள், யானை, குதிரை, பசு ஆகியவற்றுடன் நடந்த திருவீதி உலாவை கோவை மண்டல ஊர்க்காவல படை தணைத்தலைவரும், சேலம் விஜய் பில்டர்ஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற பக்தர்கள், சிவனின் புகழ் பாடியபடி நடனமாடி சென்றனர். இதில், விபூதி சாமியார் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். விஜய் மஹாலில் நடந்த கூட்டத்தில் கோவை சின்னவேடம்பட்டி, சிலுவை ஆதீனம், கோவை இளையபட்டம் மருத்தாசல அடிகளார், தென்சேரிமலை திருநாவுக்கரசர் மடம், முத்துசிவ அடிகளார், கோவை மணிவாசக அருள்பணி மன்ற தலைவர் செழியப்பனார் ஆகியோர் பக்தி சொற்பொழிவாற்றி அருளாசி வழங்கினர். இரண்டு நாட்கள் நடந்த மாநாட்டில், மாநிலம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான சிவ பக்தர்கள், சிவனடியார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.