திருநெல்வேலி:பாளை., ராஜகோபால சுவாமி கோயிலின் வடக்கு பகுதியிலும் நேர் கோட்டில் சுற்றுச்சுவர் கட்டவேண்டும் என்ற பக்தர்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது.பாளை., யில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அழகியமன்னார் ராஜகோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் சுமார் ரூ.1 கோடி செலவில் திருப்பணிகள் நடத்திமுடிக்கப்பட்டு கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. கோயிலை சுற்றிலும் கோயிலுக்கு சொந்தமான காலியிடம் அதிக அளவில் உள்ளது. இங்கு பழைய இரும்பு வியாபாரம் செய்யும் கடைகளை வைத்தும், பெட்டிகளை போட்டும், ஆடு, மாடுகளை கட்டியும் கோயில் இடத்தை சிலர் ஆக்ரமித்தனர். இதையடுத்து கோயில் இடத்தை பாதுகாத்து பராமரிக்க திருப்பணி கமிட்டி முடிவு செய்து நடவடிக்கை எடுத்தது.கோயிலை சுற்றிலும் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும், பக்தர்கள் சகதியை மிதிக்காமல் வந்து செல்லவும் சிமெண்ட் தளங்களும் அமைக்கப்பட்டன. இதற்கிடையே கோயில் முகப்பு பகுதியில் காம்பவுண்ட் சுற்றுச்சுவர் அமைக்க பாளை., தொகுதி எம்.எல்.ஏவான முன்னாள் அமைச்சர் மைதீன்கான் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.அதன்படி கோயில் முன்பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்தது. கோயிலின் தெற்கு பகுதியில் சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்டு, இரும்பு கேட் போடப்பட்டது. வடக்கு பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். வடக்கு பகுதியில் நேர் கோட்டில் சுற்றுச்சுவர் கட்டப்படாமல் பாதி அளவிற்கு வானம் மட்டுமே தோண்டப்பட்டிருந்தது.வடக்கு பகுதியில் நேர் கோட்டில் சுற்றுச்சுவர் கட்டினால் தான் கோயிலை சுற்றிலும் காம்பவுண்ட் கட்டப்படுவதற்கான நோக்கம் நிறைவேறும் என பக்தர்கள் வலியுறுத்திவந்தனர். இதே கருத்தை வலியுறுத்தி பா.ஜ., இந்துமுன்னணி போன்ற அமைப்புக்களும் போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்திவந்தன.தமிழகத்தில் அதிமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதை தொடர்ந்து பாளை., ராஜகோபால சுவாமி கோயிலின் வடக்கு பகுதியில் நேர் கோட்டில் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக வானம் தோண்டும் பணி நீண்ட நாட்களுக்கு பின் துவங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.