அன்னூர் : மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில் நான்கு கோடி ரூபாய் செலவில் ராஜகோபுரம் கட்டும் பணி விரைவில் துவங்குகிறது. கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், அன்னூரை அடுத்த பசூரிலிருந்து 6 கி.மீ., தொலைவில் பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் 300 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் ஆறு சனிக்கிழமைகளில் திருவிழா நடக்கிறது. கோவிலில் சிறப்பு யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சுதர்சன ஹோமம், சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை தொடர்ந்து நடக்கின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் பல ஆயிரம் பக்தர்கள் இங்கு வருகின்றனர். இக்கோவில், "மேலத்திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ராஜகோபுரம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் பல ஆண்டுகளாக விருப்பம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, நான்கு கோடி ரூபாய் மதிப்பில் ஏழுநிலை கொண்ட ராஜகோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 104 அடி உயரமும், முகப்பில் 55 அடியும், பக்கவாட்டில் 39 அடியும் கொண்டதாக இக்கோபுரம் அமைய உள்ளது. கோபுர வடிவமைப்புக்கு இந்து அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது; மூன்று ஸ்தபதிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. பழமையான இக்கோவிலின் ராஜகோபுரம் கட்டும் பணி விரைவில் துவங்க உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.