பதிவு செய்த நாள்
18
மார்
2015
11:03
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், உண்டியலில் உள்ள காணிக்கையை எண்ணும் பணியில், இந்தாண்டில் முதன்முறையாக, கல்லுாரி மாணவர்களை ஈடுபடுத்திஉள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து விட்டு செல்கின்றனர். மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில், பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை தீர்க்க, பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். 256 பேர் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள், ஒவ்வொரு மாதமும் கோவில் ஊழியர்களால் எண்ணப்படுகிறது. அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல், நேற்று முன்தினம் வரை பக்தர்கள் அளித்த காணிக்கை, நேற்று காலை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டன. இதில், 200 கோவில் ஊழியர்கள், திரு த்தணி அரசினர் கலைக் கல்லுாரி மாணவர்கள், 36 பேர் மற்றும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள், 20 பேர் என, மொத்தம், 256 பேர் உண்டியல் பணம் பிரித்து, நேற்று எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்தாண்டில் முதன்முறையாக, கல்லுாரி மாணவர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கோவில் ஊழியர் பற்றாக்குறை மற்றும் உண்டியல் எண்ணிக்கையை விரைவில் முடிக்க, கல்லுாரி மாணவர்களை சிறப்பு பணிக்காக அழைத்து, எண்ணும் பணியில் ஈடுபடுத்தினோம். தேவைப்படும் போது, சமூக தொண்டு ஆர்வலர்களை வரவழைப்போம் என்றார்.
என்.சி.சி., மாணவர்கள்: இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத கல்லுாரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், “திருத்தணி முருகன் கோவில் நிர்வாகத்தினர், கடிதம் எழுதி கேட்டு கொண்டதன் பேரில், கல்லுாரி என்.சி.சி., மாணவர்களை உண்டியலில் உள்ள காணிக்கையை எண்ணும் பணிக்கு அனுப்பி வைத்தோம் என்றார். மேலும், “இந்தாண்டில் முதன்முறையாக, மாணவர்களை நேற்று அனுப்பி யுள்ளோம். கடந்த ஆண்டுகளில், மொத்தம், இதுவரை மூன்று முறை மட்டுமே, மாணவர்களை உண்டியலில் உள்ள காணிக்கையை எண்ணும் பணிக்கு அனுப்பிஉள்ளோம் என்றார்.