பதிவு செய்த நாள்
24
ஜூன்
2011
11:06
ஓசூர்: ஓசூர், தோட்டகிரி சாலையில் உள்ள ஸ்ரீகுபேர கணபதி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. ஓசூர், தோட்டகிரி சாலையில் உள்ள ஸ்ரீ பூவராகவ சாமி நகரில், ஸ்ரீ குபேர கணபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில், விமான கோபுரம் அமைத்து அருள்மிகு குபேர கணபதி மூலஸ்தானம் பிரதிஷ்டை செய்து, மகா கும்பாபிஷேக விழா கடந்த, 17ம் தேதி துவங்கி நடக்கிறது. விழாவையொட்டி, கோவிலில் கணபதி பூஜை, கணபதி ஹோமம், விமான கலச ஸ்தாபிதம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து, விக்னேஷ்வர பூஜை, புண்யாவாசணம், யாகசாலை அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. நேற்று, விமான கோபுரம் மற்றும் மூலதஸ்தானம் பிரதிஷ்டை கும்பாபிஷேக விழா நடந்தது. பின் தீபாராதனை, பிரசாதம் விநியோகம், அன்னதானம் ஆகியவை நடந்தது.சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ராஜா சிட்டி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் செய்திருந்தனர். ஓசூர் அடுத்த கொத்தூர் கிராமத்தில், ஸ்ரீ தோப்பம்மாதேவி கோவிலில், புதிதாக கட்டியுள்ள ஆலய பிரதிஷ்டாபனை கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கணபதி பூஜை, புண்ணியாகம், ரக்ஷா பந்தனம், அங்குரார்பணம், கலச ஸ்தாபனை, பிம்மசுத்தி, அக்னி பிரதிஷ்டை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கும்பாபிஷேக விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ தோப்பம்மாதேவி பக்தர்கள், கொத்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.