பதிவு செய்த நாள்
21
மார்
2015
12:03
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு நிகழ்ச்சியுடன், இந்த ஆண்டு குண்டம் விழா, வரும், 23ம் தேதி துவங்குகிறது.சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத உத்திரம் நட்சத்திரம் அடுத்து வரும் செவ்வாய் கிழமை குண்டம் விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு குண்டம் விழா, 23ம் தேதி இரவு பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. விழாவை முன்னிட்டு, பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.வரும், 23ம் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் விழா துவங்கி, 24ம் தேதி இரவு நித்தியப்படி பூஜை முடிந்து, பண்ணாரி அம்மன் வீதியுலாவுக்காக சப்பரத்தில், சிக்கரசம்பாளையம் செல்கிறது. 25ம் தேதி சிக்கரம்பாளையம், சிக்கரம்பாளையம் புதூர் பகுதியில் அம்மன் சப்பரத்தில் வீதிஉலா நடக்கிறது. 26ம் தேதி புதூர், வெள்ளியம்பாளையம், தயிர்பள்ளம் பரிசல் மூலம் பகுடுதுறை சென்று, இரவு தொட்டம்பாளையத்தில் தங்குகிறது. 27ம் தேதி காலை தொட்டம்பாளையம், வெள்ளியம்பாளையம் புதூர், இக்கரை தத்தப்பள்ளி, அக்கரை தத்தப்பள்ளி செல்கிறது.வரும், 28ம் தேதி உத்தண்டியூர், அய்யன் சாலை வழியாக ராமபுரம் சென்று, அங்கு ஏழைகளுக்கு அன்னதானம் நடக்கிறது. பின், தாண்டாம்பாளையம், இக்கரைநெகமம், கெஞ்சனூர், திருவள்ளுவர் நகர் வழியாக சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை வந்து, அங்குள்ள தண்டுமாரியம்மன் கோவிலில் இரவு தங்குகிறது. பின், 29ம் தேதி சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை, கடைவீதி, அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் வீதிஉலா சென்று, இரவில் சத்தியமங்கலம் வேணுகோபால் சுவாமி கோவிலில் தங்குதலும், 30ம் தேதி சத்தி ரங்கசமுத்திரம், எஸ்.ஆர்.டி., கோணமூலை, காந்தி நகர், திம்மையன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக, புதிய எக்ஸ்டென்ஷன் வீதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்து, இரவல் கோட்டுவீராம்பாளையம் சௌடேஸ்வரியம்மன் கோவிலில் தங்குகிறது.வரும், 31ம் தேதி சத்தி பகுதி முடிந்து, பட்டவர்த்தி அய்யம்பாளையம், புதுவடவள்ளி, புதுகுய்யனூர், பசுவபாளையம், புதுபீர்கடவு, பட்டரமங்கலம், ராஜநகர் வழியாக, இரவு பண்ணாரி கோவிலை வந்தடைகிறது. பின் கம்பம் சாட்டும் நிகழ்ச்சி நடக்கும். ஏப்., 1 முதல், 5ம் தேதி வரை நித்தியப்படி பூஜை மற்றும் இரவு, 7 மணிக்கு மேல் மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டை, பீனாச்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும், கழியாட்டம் நடக்கிறது. 7ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு குண்டம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை, பண்ணாரி மாரியம்மன் கோவில் துணை ஆணையர் மாரிமுத்து தலைமையில், அதிகாரிகள் செய்து வருகின்றனர்.