பதிவு செய்த நாள்
23
மார்
2015
10:03
வேலுார்: காட்பாடி அருகே, ராஜராஜசோழன் பாட்டனார் சமாதி கோவிலில், லிங்கத்தின் மீது, சூரிய ஒளிக்கதிர்கள் இயற்கையாகவே விழும் அதிசய நிகழ்வு நடைபெறுகிறது. வள்ளிமலை அருகே பொன்னை ஆற்றின் கரையில், மேல்பாடி கிராமத்தில், தபஸ்கிருதாம்பாள் - சோமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முன், பராந்தக சோழன் கட்டி, ராஜராஜ சோழ மன்னர் மகா கும்பாபிஷேகம் செய்த பெருமைக்குரியது. இந்த கோவிலின் தென் திசையில், 200 அடி துாரத்தில், ராஜராஜ சோழனின் பாட்டனார், ஆரூர் துஞ்சியத் தேவன் சமாதி உள்ளது. இவர், கி.பி., 1014ல் நடந்த போரில் வீரமரணம் அடைந்தார். அவர் நினைவாக கருங்கற்களைக் கொண்டு, அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அருஞ்சிகை ஈஸ்வரர் கோவில் எழுப்பப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.இந்த கோவில் லிங்கத்தின் மீது ஆண்டுதோறும், மார்ச் 21 முதல் 24 வரை, தினமும் காலை, 6:00 மணி முதல், 6:30 மணி வரை, சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன. இந்த ஆண்டும், லிங்கத்தின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன. இதை, வேலுார் மாவட்ட பக்தர்கள் பார்த்து தரிசித்தனர்.