பதிவு செய்த நாள்
24
மார்
2015
11:03
காரைக்கால்: திருநள்ளார், சனீஸ்வர பகவான் கோவிலுக்கு ரூ.80 லட்சம் மதிப்பில் செய்யப்படும் 3 தேர்களுக்கு சக்கரம் பொருத்தும் பணி நடந்தது. காரைக்கால், திருநள்ளார், தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக விளங்கும் திருநள்ளாருக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுதோறும், தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா தேரோட்டத்தில் இரண்டு தேர்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். இந்நிலையில், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு புதிதாக 3 தேர்கள் செய்வதற்கு கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியது. வரும் ஏப்ரல் 3ம் தேதியன்று, வெள்ளோட்டத்துக்கு தேதி குறிக்கப்பட்டுள்ள நிலையில், தேர் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தேர்களுக்கு சக்கரம் பொருத்தும் பணி நேற்று நடந்தது. இப்பணியை, கலெக்டர் வல்லவன் பார்வையிட்டார். கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகசுந்தரம் உடனிருந்தனர்.