பதிவு செய்த நாள்
25
மார்
2015
11:03
கோவை: கோவை மருதமலை முருகன் கோவிலில், பஞ்சாமிர்தம் தயாரிக்க இயந்திரம் நிறுவப்பட உள்ளது. கோவை மாவட்டத்தின் புகழ்பெற்ற கோவில்களில், மருதமலை முருகன் கோவிலும் ஒன்று. ஏழாம் படைவீடாக போற்றப்படும் இக்கோவிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ‘முருகனின் ஆறு படை வீடுகளிலும், வழங்கப்படுவதைப்போல, மருதமலையிலும் பஞ்சாமிர்தம் வழங்கப்பட வேண்டும் என, பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதை ஏற்று, சில மாதங்களுக்கு முன், மருதமலையில் பஞ்சாமிர்தம் தயாரித்து விற்பனை செய்ய துவங்கினர். பக்தர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து, இயந்திரம் மூலம் பஞ்சாமிர்தம் தயாரித்து, விற்பனையை அதிகப்படுத்த உள்ளனர். இதற்காக, நான்கு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இயந்திரம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள், அதை பொருத்தி, சோதனை செய்யும் பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பஞ்சாமிர்தம் முதலில், சோதனை முயற்சியாகத்தான் கொண்டு வரப்பட்டது. விற்பனை அதிகரித்ததால், அதற்கு ஏற்ப தயாரிப்பை அதிகப்படுத்த வேண்டும் என எண்ணி, பக்தர்களின் நன்கொடை மூலம், இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்திலிருந்து, இயந்திரம் மூலம் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி துவங்கும், என்றார்.