பதிவு செய்த நாள்
25
மார்
2015
11:03
புதுச்சேரி: திருப்புகழில், ராமாயணம் முழுவதும் கூறப் பட்டுள்ளது என, முன்னாள் நீதிபதி ராமபத்திரன் பேசினார். புதுச்சேரி ஆர்ஷ வித்யாபவன் சார்பில், அண்ணா நகர் எட்டாவது கிராசில் உள்ள சர்வசித்தி வலம்புரி விநாயகர் கோவிலில், கடந்த 22ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை ராமநவமி கொண்டாடப்படுகிறது. பல்வேறு தலைப்புகளில் தினமும் சொற்பொழிவு நடக்கிறது. நேற்று 24ம் தேதி, பதிவிரதைகள் மூன்று பேர் என் தலைப்பில், அகலிகை, தாரா, மண்டோதரி ஆகியோர் குறித்து முன்னாள் நீதிபதி ராமபத்திரன் பேசியதாவது: இந்து தர்மத்தில் நல்ல பழக்க வழக்கங்களை முன்னோர்கள் நமக்கு கூறியுள்ளனர். பதிவிரதைகளை நினைத்துக் கொண்டாலே நமது துன்பங்கள் தீர்ந்துவிடும். அப்படிபட்ட பதிவிரதைகளாக சீதா, அகலிகை, தாரா, மண்டோதரி ஆகியோர் திகழ்கின்றனர். கவுதம முனிவரின் மனைவியான அகலிகை, உடலால் மாசுபடுகிறாள். அவளை கல்லாக சமைய, முனிவர் சாபம் விட்டு, விமோசனமாக, ராமனின் கால் துகள்கள் பட்டால், பழைய நிலைக்கு திரும்பலாம் என தெரிவிக்கிறார். அதன்படி கல்லாக சமைந்த அகலிகை ராம நாமத்தை அனுதினமும் உச்சரிக்கிறாள். ஒருநாள் ராமனால் பாவ விமோசனம் பெறுகிறாள். அகலிகை மனக்கருவறையில் பல ஆண்டு காலம் தன்னை சுமந்ததால் தாயே என்று அழைத்ததாக ராமன் கூறுகிறார். உடலால் மாசு பட்டிருந்தாலும், தன் தவறை உணர்ந்து, உத்தமியாகிறாள். அதே போல், சமயோஜித புத்தியால், நிலமையை சமாளிக்கும் சிறந்த பதிவிரதையாகவும், சுக்ரீவனுக்கு தாய்போன்று வழிகாட்டி உள்ளார் தாரா. இறந்து கிடக்கும் தன் கணவன் உடல் மீது அழுது புலம்பும்போது கூட, ராமனை பரமாத்மா என்று அழைத்த ஒரே பெண்மணி மண்டோதரி, யாரை, யார் என்று அறிந்து கொள்வதில் வல்லவர். ெஜன்மத்தை காக்கும் மந்திரமாக ராமநாமம் உள்ளது. திருப்புகழில், ராமாயணம் முழுவதும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். வரும் 28ம் தேதி வரை தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில் சொற் பொழிவு நடக்கிறது.