சபரிமலை பக்தர்களின் வசதிக்காக வண்டிப்பெரியாறில் புதிய பாலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2015 12:03
வண்டிப்பெரியாறு : சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக வண்டிப்பெரியாறு நகரில் உள்ள பழமையான பாலத்திற்கு பதிலாக ரூ. 9.5 கோடியில் புதிய பாலம் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது. கேரள மாநிலம் எரிமேலி அருகில் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலிற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் செல்கின்றனர். குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு வழியாக தான் எரிமேலி செல்ல முடியும். வண்டிப்பெரியாறு நகரில் மிகவும் பழமையான ஒருவழிப்பாதை பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக வாகனம் வரும் போது எதிரில் வாகனம் செல்ல முடியாது. இதனால் வாகனங்கள் செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக சபரிமலை சீசனில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பலமணிநேரம் நின்று செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. எனவே இந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட நீண்டநாட்களாக ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது 102 ஆண்டுகால பழமையான அந்த பாலத்தை இடிக்காமல் அதை ஒட்டியே புதிய பாலம் கட்ட கேரள பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ரூ. 9.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த புதிய பாலம் 7.5 மீட்டர் அகலம் கொண்டது. இருவழிப்பாதை பாலமாக கட்டப்பட உள்ளது.