பதிவு செய்த நாள்
26
மார்
2015
01:03
சேலம்,: சேலம், எல்லைப்பிடாரியம்மன் கோவிலில், நேற்று, 50 அடி உயரம், அந்தரத்தில் தொங்கியபடி, பக்தர்கள் அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள், பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி சென்றனர். சேலம், செரிரோட்டில், எல்லைப்பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மாநகரின் எட்டு திசைகளையும் காத்தருளுவதால், எல்லைப்பிடாரியம்மன் என்று பெயர் எழுந்தது என்பது ஐதீகமாகும். சேலம் மணக்காடு, ஜான்சன்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை, வின்சென்ட், புதூர், அழகாபுரம், காட்டூர், டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், விழாவில் திரளாக பங்கேற்பர்.கடந்த மார்ச், 17ம் தேதி, இரவு, 7 மணிக்கு, பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன், திருவிழா துவங்கியது. தினமும் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மார்ச், 24ம் தேதி இரவு ,8 மணிக்கு பக்தர்கள் மா விளக்கு ஏந்தி ஊர்வலமாக சென்றனர். விழாவின் முக்கிய நாளான நேற்று, காலை, 7 மணியில் இருந்தே, மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். காலை, 11 மணிக்கு மேல், கொளுத்தும் வெயிலில், கிரேன் வாகனத்தின் மூலம், 50 அடி உயரத்தில் தொங்கியவாறு, காவடி அலகு குத்தி, ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.மொத்தம், ஆறு வாகனங்களில் பக்தர்கள் அணி வகுத்து சென்றனர். தங்கள் கன்னத்தில், வேல் அலகு குத்தியவாறு, கையில் தீச்ட்டி ஏந்தி ஏராளமானோர், நேர்த்திக்கடன் செலுத்தினர். பட்டா கத்தி அலகு, எழுமிச்சை அலகு என்று, பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப நேர்த்திக்கடனை செலுத்தினர்.கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சிறப்பு வழிபாடு நடத்தி, அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலில் மிகவும் பிரசித்த பெற்ற அக்னி குண்டம் (தீ மிதித்தல்) இறங்கும் நிகழ்ச்சி, இன்று மாலை, 3 மணிக்கு துவங்குகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.