பதிவு செய்த நாள்
27
ஜூன்
2011
10:06
சென்னை : ராமேஸ்வரம் நகரம் மற்றும் ராமநாதசாமி கோவிலை மேம்படுத்த திட்டம் வகுக்குமாறு தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ராமநாதசாமி கோவிலில் உள்ள தங்கச் சிலையை சரிசெய்யக் கோரி, பக்ஷி சிவராஜன் என்பவரும், வாகனங்கள் நிறுத்துவதற்காக அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ததை எதிர்த்து பாலா என்பவரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவு: ராமேஸ்வரம் ஒரு புனித ஸ்தலம். சிவலிங்கத்தை ராமர் நிர்மாணித்து, பூஜைகள் செய்த இடம். ராமேஸ்வரம் வந்து இங்குள்ள கோவிலில் வழிபட்டு அக்னி தீர்த்தத்தில் குளித்தால் தான், காசி யாத்திரை பூர்த்தியடையும். மண்டபத்தையும், தீவையும் இணைக்கும் பாம்பன் பாலம் பிரசித்தி பெற்றது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சொந்த ஊர். தினசரி ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். திருப்பதி, மதுரை போன்ற புனித ஸ்தலங்களுக்கு இணையாக ராமேஸ்வரத்தையும் கருதி, அதன் மேம்பாட்டுக்கான திட்டத்தை வகுப்பதற்கான சாத்தியக்கூறுகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, திட்டம் வகுத்து, அதை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, டிசம்பர் 31ம் தேதிக்குள், அறிக்கையை தலைமைச் செயலர் தாக்கல் செய்ய வேண்டும். போதிய உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு, ஸ்ரீரங்கத்தை பெரிய யாத்ரீக ஸ்தலமாக மேம்படுத்த, 190 கோடி ரூபாய்க்கான திட்டத்தை, முதல்வர் அறிவித்துள்ளார். முக்கிய யாத்ரீக ஸ்தலமான ராமேஸ்வரம் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்தலத்தையும் அரசு உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதி சசிதரன் உத்தரவிட்டுள்ளார்.