ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்திலிருந்து கடந்த பிப்.16ல் தேவகோட்டையை சேர்ந்த தட்சணாமூர்த்தி தலைமையில் காரைக்குடி, திருவாடானை, பரமக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சியை சேர்ந்த 19 பக்தர்கள் பாதயாத்திரையாக காசிக்கு புறப்பட்டனர். உலக மக்கள் நன்மைக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியும் பாதயாத்திரை சென்ற இக்குழுவினர் நான்கு மாதத்தில் 3ஆயிரம் கி.மீ. நடந்து வழியில் பல்வேறு புனிதத்தலங்களுக்கு சென்று கடந்த 13ல் காசியை சென்றடைந்தனர். பின் ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட அக்னிதீர்த்த கடல் மணலை கங்கை நதியில் கரைத்து புனித நீராடி கோடி தீர்த்தத்தினால் காசிவிசுநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து ரயில் மூலம் நேற்று ராமேஸ்வரம் திரும்பிய இவர்களை பாதியாத்திரைக்குழு அமைப்பாளர் காசிநாதன், கவிஞர் பழனியப்பன் வரவேற்றனர். பின் பாதயாத்திரைக்குழுவினர் அக்னிதீர்த்தக்கடலில் புனித நீராடி காசியில் இருந்து கொண்டு வந்த புனித கங்கை நீரால் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு பாதயாத்திரையை நிறைவு செய்தனர்.