மயிலாடுதுறை: நாகை மாவட்டம் செம்பனார்கோவிலை அடுத்த திருப்பறியலூரில் புகழ் பெற்ற ஸ்ரீ இளம்கொம்பனையாள் உடனாகிய ஸ்ரீ வீரட்டேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. அட்ட வீரட்டானங்களுல் ஒன்றான இத்தலத்தில் சுவாமி தக்கனை சம்கரித்ததாக கூறப்படுகிறது. இத்தலத்தில் திருஞான சம்பந்தர் தேவாரம் பாடியுள்ளார். திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி தேவஸ்தானத்துடன் இனைந்த இக்கோவில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்திருந்தது. தருமபுர ஆதினம் சார்பில் ரூ 2 கோடி செலவில் திருப்பணி செய்யப்பட்டது. திருப்பணி வேலைகள் அனைத்தும் முடிந்ததையடுத்து நேற்று காலை கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 22ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப் பட்டு நேற்று காலை 9 மணிக்கு மகா பூர்ணாகுதி நடத்தப்பட்டது. 9 மணிக்கு கடம் புறப்பாடு செய்யப்பட்டு 10:30 மணிக்கு விமாணங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தில் தருமபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சரரிய சுவாமிகள், மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ திருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத் துக்குமார சுவாமிகள் மற்றம் பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை கணேச குருக்கள் தலைமையிலானோர் செய்துவைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பறியலூர் ஸ்ரீ வீரட் டேஸ்வரர் கோவில் தேவஸ்தான டிரஸ்டி ஸ்தானீகம் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் செய்திருந்தார். செம்பனார் கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.