பதிவு செய்த நாள்
02
ஏப்
2015
12:04
சென்னிமலை : சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர தேர்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மலைகளில் தலையாய மலையாக போற்றப்படும் சென்னிமலை, கடல் மட்டத்தில் இருந்து, 1,749 அடி உயரத்தில் உள்ளது. இங்கு மலை மீது, குமரக் கடவுள் பாலதண்டாயுதபாணி அருள்பாலிக்கிறார். இங்கு தினமும், படி வழியாக முருகப்பெருமானுக்கு எருதுகள் மூலம், திருமஞ்சனம் (தீர்த்த குடம்) கொண்டு செல்வது தனிச்சிறப்பு. இங்கு முருகப்பெருமானுக்கு, தனித்தனியாக இரண்டு பெரிய தேர் உள்ளது. இது தை பூச தேர் மற்றும் பங்குனி உத்திர தேர் என அழைக்கப்படுகிறது.இங்கு ஆண்டு தோறும் பங்குனி உத்திர தேரோட்டம், வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு பங்குனி உத்திரவிழா, நேற்று வழக்கப்படி இசைவேளாளர்கள் சமூகத்தை சேர்ந்த நாட்டாமை, பெரியதனகாரர்கள், பெரியவர்கள் முன்னிலையில், மலை மேல் கொடி மரத்தில் சேவல் கொடியை ஏற்றி, உத்திர விழாவை துவக்கி வைத்தனர். கொடியேற்றத்துக்கு முன் முருகன், வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்திகளுக்கும், மூலவர்க்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தலைமை குருக்கள் ராமநாதசிவம் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்ய, இசை வேளாளர்கள் சமூகத்தினர், சேவல் கொடியை ஏற்றி, விழாவை முறைப்படி துவக்கி வைத்தனர். முருகதாஸ், காவேரிரங்கன், எஸ்.ஏ.பி., டெக்ஸ் மேலாளர் சிவசுப்பிரமணியம், இந்திரா டெக்ஸ் மேலாளர் சுகுமார்ரவி, சென்னிமலை டவுன் பஞ்., கவுன்சிலர் சௌந்திரராஜன், முத்துகணேஷ், மதன், பிரகாஷ், வேலுவிலாஸ் சபரி உட்பட பலர் பங்கேற்றனர்.முருகப்பெருமானுக்கு இன்று இரவு திருக்கல்யாணமும், நாளை காலை, 6 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. மாலை, 5 மணிக்கு தேர் நிலை சேரும். 4ம் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. 5ம் தேதி காலை மகாதரிசனம் நடக்கிறது. இரவு மஞ்சள் நீர் நிகழ்சியுடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெறுகிறது.