பதிவு செய்த நாள்
28
ஜூன்
2011
10:06
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயில் தலைமை பூசாரி( மேல்சாந்தி) தேர்வில், புதிய நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. சபரிமலை மற்றும் மாளிகைபுரத்தம்மன் கோயில் தலைமை பூசாரி, ஒவ்வொரு ஆண்டும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். ஆனால், மேல்சாந்தியை தேர்வு செய்வதில், தங்களுக்கே உரிமை உண்டு என, தந்திரிகளாக தேர்வு செய்யப்படும் தாழமண் குடும்பத்தினரும், பந்தளராஜா குடும்பத்தினரும் பிரச்னை செய்தனர். இந்த விஷயத்தை தீர்க்க, நீதிபதி தாமஸ் தலைமையில் ஒரு குழு அமைத்து அறிக்கை அளிக்கும் படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சமீபத்தில், தாமஸ் அறிக்கை அளித்தார். இதன்படி மேல்சாந்தியாக விரும்புபவர்களின் விண்ணப்பத்தை பரிசீலித்து தேர்வு செய்ய, பந்தளராஜா குடும்பத்தில் சிலரும், தாழமண் குடும்பத்தினர் சிலரும், திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் தேர்வுக்குழுவில் இடம் பெறுவர். மேல்சாந்தியாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, இந்த குழுவினர், தலா, 30 மதிப்பெண் அளிப்பர். 90 மதிப்பெண்கள் பெறுபவர் மேல் சாந்தியாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
புதிய மேம்பாலம்: பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை, மூன்றே நாட்களில் அமைத்து விட முடியும் என, ராணுவ கட்டுமானப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும், சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பக்தர்கள் எளிதாகவும், விரைவாகவும் சுவாமி தரிசனம் செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், மிலிட்டரி பொறியியல் பிரிவைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள், கட்டுமானத்திற்கான பொருட்கள் அனைத்தும் விரைவாக சபரிமலைக்கு எடுத்து வரும் பட்சத்தில், மூன்றே தினங்களில் மேம்பால பணிகளை முடித்து விட முடியும் என்றனர். மாளிகைப்புறத்தம்மன் சன்னதியில் துவங்கி, பஸ்ம குளம் வழியாக, சந்திரானந்தன் சாலையில் முடியும் வகையில், பன்னிக்குழி பகுதியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பாலம், 90 மீட்டர் நீளமும், மூன்று மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். இதில், 9 டன் எடையை தாங்கக்கூடிய இரும்பு நடை பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இரும்பு கர்டர்கள் பம்பை பகுதியிலிருந்து, சபரிமலைக்கு எடுத்துச் செல்வதுதான் மிகவும் சிரமமான பணியாக இருக்கும் என, கருதப்படுகிறது. இரும்பு கர்டர், 14 அடி நீளம் கொண்டதாக இருக்கும் என்பதால், எப்படி பம்பையிலிருந்து, சன்னிதானத்திற்கு கொண்டு செல்வது என்பதுதான், கேள்விக்குறியாக உள்ளது. இத்திட்டத்தில், மேம்பால பணிகளை மட்டுமே ராணுவம் செய்து தரும். பிற பணிகளான,120 மீட்டர் நீளத்திற்கான இணைப்புச் சாலை, படிக்கட்டுக்கள் ஆகியவற்றை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தான் செய்ய÷ஒவண்டும். இப்பணிகளை வரும், மண்டல மகர ஜோதி உற்சவ காலத்திற்கு முன் முடித்து விட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, மாநில தேவஸ்வம் துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.