பதிவு செய்த நாள்
06
ஏப்
2015
01:04
திருப்பதி : திருமலையில் பக்தர்கள் வருகை அதிகமானதால், காத்திருப்பு வரிசையில் நெரிசல் ஏற்பட்டது.தொடர் விடுமுறை, வார இறுதி நாட்கள், மூன்று நாட்கள் நடக்கும் தும்புரு தீர்த்த முக்கோட்டி திறப்பு என, அனைத்தும் ஒரே சமயத்தில் வந்ததால், திருமலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.மேலும் நேற்று முன்தினம் சந்திர கிரகணத்தை ஒட்டி, தேவஸ்தானம், 9:00 மணி நேரம் கோவிலை மூடியதால், பக்தர்கள் தரிசன வரிசைக்குள் செல்ல முடியாமல், காலை முதல் மாலை வரை சாலையில் காத்திருந்தனர்.பின், தேவஸ்தானம், மாலை, 4:00 மணிக்கு மேல், பக்தர்களை காத்திருப்பு அறைக்குள் அனுமதித்தது. இதனால், அந்த பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இந்த நிலை, திங்கட்கிழமை வரை நீடிக்கும் என்பதால் ஞாயிறு, திங்கள் இரு தினமும், வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தை, தேவஸ்தானம் ரத்து செய்தது.