பதிவு செய்த நாள்
06
ஏப்
2015
01:04
காரைக்குடி: மக்கள் அனைவரும் சண்டை, சச்சரவுகளை மறந்து ஒற்றுமையாக வாழ காரைக்குடி பகுதிகளில், நிலவு வழிபாடு நூற்றாண்டை கடந்து தொடர்ந்து நடந்து வருகிறது. காரைக்குடி அருகேயுள்ள பாலைய நாட்டு கிராமங்கள் எனப்படும் பாலையூர், கண்டனூர், கோட்டையூர், வேலங்குடி, மணச்சை, நேமத்தான்பட்டி, கானாடுகாத்தான், கொத்தரி, கருவியப்பட்டி, வடகுடி உட்பட 16க்கும் மேற்பட்ட கிராமங்களில், அறுவடை முடிந்து மாசி வளர்பிறை நாளில் ஆரம்பித்து, பவுர்ணமி வரை நிலவை வணங்கி கொண்டாடும், நிலாவாண்டை எனும் கலாசார வழிபாட்டு மரபு தொன்று தொட்டு நடந்து வருகிறது. வளர்பிறை ஆரம்பித்து பவுர்ணமி வரையிலான நாட்களில், ஊருக்கு பொதுவான இடத்தில்,ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து செங்கற்களும், செம்மண்ணும் கொண்டு சதுரமாய் கட்டி, நடுவில் மனை போட்டு தினமும் ஒன்று கூடி, இயற்கை கடவுளான நிலவை (சந்திரனை) வழிபடுவர். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் இருந்து விதவிதமான பலகாரங்கள் கொண்டு வந்து, செங்கல்லால் கட்டப்பட்ட சதுரத்துக்குள் வைப்பர். நிவேதனமாக வாவரச மர இலை, பூக்களை வைப்பார்கள். பெண்கள், பெண் குழந்தைகள் இருவரிசையாக நின்று நிலவை வாழ்த்தி பாடல் பாடுவர். வாழ்த்தி முடிந்ததும், பலகாரங்கள் அனைத்தும், ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி கலக்கி எல்லோருக்கும் வழங்கப்படும். விழா இறுதி நாளில், கும்மி, காவடி இறங்குதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சி இடம்பெறும்.
ஜி. சந்திரன், சுப்பையா, வேலங்குடி: மாசி பங்குனி வளர்பிறை நாட்களில் நிலவு வழிபாடு இப்பகுதியில் தொன்று தொட்டு மேற்கொண்டு வருகிறோம். மற்ற பாலைய நாட்டு கிராமங்களில் மாசி மாதமும், வேலங்குடியில்பங்குனி மாதமும் நடக்கும். இயற்கை நமக்கு நன்மை பயக்க வேண்டும், என இயற்கையை வழிபடும் முறையே இது. வளர்பிறையின் இறுதிநாளான பவுர்ணமி அன்று, ஊர்மக்கள் அனைவரும் ஒன்று கூடி பொங்கலிடுவர். அதில் முதல் பொங்கல் யாருக்கு பொங்குகிறதோ, அவர்கள் வீட்டில் உள்ள ஒரு சிறுவர் மாப்பிள்ளையாகவும், இரண்டாவது பொங்கல் யாருக்கு பொங்குகிறதோ, அவர்கள் வீட்டில் உள்ள சிறுமி பெண்ணாகவும் பாவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பெரியவர்கள் வாழ்த்து கூறி ஆசிர்வதிப்பர். வழிபாட்டு நாட்களில் ஊர் பலகாரம் மொத்தமும் ஒரு பாத்திரத்தில் இடப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்படும். இதன்மூலம் ஒற்றுமை நிலை நாட்டப்படுகிறது. இறுதிநாளில் காவடி எடுத்து வேல்போடும் நிகழ்ச்சி நடக்கும், என்றார்.