காலகாலமூர்த்தி கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2015 05:04
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எருக்கட்டாஞ்சேரி கிராமத்தில் சுந்தரால் பாடல் பெற்ற ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் சமேத காலகால மூர்த்தி கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த தலத்தில் பூமா தேவியின் பிரார்த்தனையை ஏற்று சுவாமி எமனை மீண்டும் உயிர்பிக்க செய்ததாக ஐதீகம். இத்தகைய சி றப்பு வாய்ந்த இந்த தலத்தில் ஆணவம்,கன்மம், மாயை ஆகியவற்றை விட்டு சுவாமி, அம்பாளை சரணடைந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
புகழ் பெற்ற இந்த கோயிலின் கு ம்பாபிஷேகம் 40 ஆண்டுகளுக்கு பிறகு காலை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3 ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி காலை 8.30 மணிக்கு மஹா பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனையுடன் 4ம் கால யாக சாலை பூஜைகள் முடிவடைந்தன. தொடர்ந்து 9மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், மார்கண்டேயர், நடராஜர் மற்றும் சுந்தரர் சன்னதி விமானங்களை அடைந்தது. அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க ஆலய அர்ச்சகர் மற்றும் சர்வசாதகம் சிவஸ்ரீ ரவிசங்கர் சிவாச்சாரியார் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.