காரைக்கால்: காரைக்காலில், ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட குமரன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காரைக்கால் அடுத்த நிரவி அரசலாற்றுக்கு தெற்கு திசையில் உள்ள, ஆனந்தவல்லி உடனுறை அருணநந்தீஸ்வர் ஆலயம் என்னும் குமரன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவில், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், எஸ்.பி., பழனிவேல், மாவட்ட நீதிபதி வைத்தியநாதன் மற்றும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனார். இக்கோவில், பல நூற்றாண்டுகளுக்கு முன், ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. 1989ம் ஆண்டு திருப்பணிகள் நடந்தபோது, பூமிக்கடியில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இதில், திருஞான சம்பந்தர் சிலையும் ஒன்றாகும். இக்கோவில் பாடல் பெற்ற ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.