பதிவு செய்த நாள்
29
ஜூன்
2011
11:06
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் மற்றும் மாளிகைப்புறத்தம்மன் ஆகிய சன்னிதிகளில், மேல்சாந்திகளை நியமிக்க ஏழு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் மற்றும் மாளிகைப்புறத்தம்மன் கோவில்களில் பணியாற்ற தேர்வு செய்யப்படும் மேல் சாந்திகள் (தலைமை அர்ச்சகர்) நியமனத்தில், தங்களுக்கும் உரிமை உள்ளது என கோரி பந்தள மன்னர் குடும்பம், தாழமண் குடும்பம் ஆகியவை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தன. மனுக்களை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் ஜெ.எஸ்.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி கே.டி.தாமஸ் நியமிக்கப்பட்டார். அவர் சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரிகள், பந்தள மன்னர் குடும்ப பிரதிநிதிகள், தந்திரி தாழமண் குடும்ப பிரதிநிதிகள் உட்பட இதுகுறித்து பலரிடம் விசாரணை நடத்தினார். இவ்வாறு அவர் 11 முறை நேருக்கு நேர் விசாரணை நடத்தி பல்வேறு ஆலோசனைகள், விளக்கங்களை பெற்றார். விசாரணையில், அவர் 2002ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த தேர்வு விவரங்களையும், விவாதங்களையும், வழக்குகள் குறித்தும் விசாரித்தறிந்தார். இதையடுத்து தான் அவர் அறிக்கை தயாரித்துள்ளார். திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர், இரண்டு உறுப்பினர்கள், தேவஸ்வம் போர்டு கமிஷனர், தாழமண் மடத்தைச் சேர்ந்த முதிர்ந்த தந்திரி, சபரிமலையில் செயல்படும் தந்திரி, மேலும், வெளியே இருந்து அனுபவமிக்க தந்திரி என ஏழு பேர் கொண்ட குழு நியமிக்க அவர் பரிந்துரைத்துள்ளார். இக்குழு தான் வருங்காலங்களில் மேல்சாந்திகளை நியமனம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனுபவமிக்க தந்திரியை தேர்வு செய்வதற்கான கமிட்டியை அமைக்க தாழமண் குடும்பம், தேவஸ்வம் போர்டு, பந்தள மன்னர் குடும்பம் ஆகியோரது பங்களிப்பு இருக்கும் என, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் எம்.ராஜகோபாலன் நாயர் தெரிவித்தார்.