பதிவு செய்த நாள்
10
ஏப்
2015
11:04
பரமக்குடி: பராமக்குடியில் ஏப்., 21ல் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்குகிறது. சித்திரைத் திருவிழாவையொட்டி, ஏப்., 21 ல் பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயிலிலும், ஏப்., 22 ல் ஈஸ்வரன் கோயிலிலும் கொடியேற்றப்படுகிறது. தினமும் பிரியாவிடையுடன் சுவாமியும், அம்பாளும், கிளி, குண்டோதரன், சிம்ம, அன்ன, ரிஷப, குதிரை வாகனங்களில் வீதியுலா வருவர். ஏப்., 30 ல் ஈஸ்வரன் கோயிலில் காலை 11 மணிக்கு விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமிக்கும், மாலை 6 மணிக்கு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. மே 1 ல் காலை 9 மணிக்கு இரு கோயில்களிலும் தேரோட்டமும், மறுநாள் தீர்த்த வாரியுடன் இரவு கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது. தொடர்ந்து சுந்தரராஜப் பெருமாள் மே 3 இரவு "கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்குகிறார். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.