பதிவு செய்த நாள்
15
ஏப்
2015
10:04
ராமேஸ்வரம் : தமிழ் புத்தாண்டையொட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. நேற்று, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து, சுவாமி, அம்மன் மற்றும் பிரியா விடை ஆகியோர் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். அங்கு சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. பின், தீர்த்த வாரி சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து, தீபாராதனை முடிந்தது, பக்தர்களுக்கு தீர்த்த வாரி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி, தரிசனம் செய்தனர். மதியம் 12.30 மணிக்கு சுவாமி சன்னதி முன்பு, கோயில் குருக்கள் பஞ்சாங்கம் வாசித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் செய்திருந்தார்.