பதிவு செய்த நாள்
15
ஏப்
2015
12:04
திருப்பூர் : தமிழ் புத்தாண்டு தினமான நேற்று, திருப்பூர் கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்; சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் கனிகள், ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. தமிழ் புத்தாண்டு தினம் நேற்று கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், விஸ்வேஸ்வரர் கோவில், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், சிவன்மலை சுப்ர மணிய சுவாமி கோவில், கொங்கணகிரி கந்தபெருமான் கோவில், முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில், நல்லூர் விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது.சுவாமிகளுக்கு புதிய வஸ்திரங்கள் சாத்துதல் மற்றும் கனி தரிசனம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், விஸ்வரூப தரிசனம், கோபூஜை உள்ளிட்டவை நடந்தன. மன்மத வருட பஞ்சாங்கம் படிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது.கோட்டை மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. யுனி வர்சல் தியேட்டர் ரோட்டிலுள்ள, ஷீரடி சாய்பாபா கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, ரூபாய் நோட்டுகளை தோரணமாக கட்டியிருந்ததனர்.
காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில் சித்திரை விஷுவை முன்னிட்டு, அதிகாலை 3:30 மணிக்கு நடை திறப்பு மற்றும் விஷு கனி தரிசனம் நடந்தது. பக்தர்களுக்கு, கனி, ஐந்து ரூபாய் நாணயம் மற்றும் சித்ரன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. காலை 5:00 மணிக்கு, கணபதி ஹோமம், 6:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, உச்சிகால பூஜை மற்றும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகோவில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.கோவில் வளாகத்தில், "அத்தப்பூ கோலம் வரையப்பட்டிருந்தது. தாராபுரம் ரோடு, மாகாளியம்மன் கோவிலில் தங்க கிரீடம் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பல்வேறு கோவில்களுக்கு பக்தர்கள் தீர்த்தம் மற்றும் பால் குடம் எடுத்து, ஊர்வலமாக சென்று, அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அனைத்து சன்னதிகளிலும் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆகாசராயர் கோவில், ஐயப்பன் கோவில், ஷீரடி சாய்பாபா கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், தாளக்கரை ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவில், பழங்கரை பொன்சோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றன. அவிநாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், அவிநாசி கோவிலில் தீர்த்தம் எடுத்து, காவடியாட்டம் ஆடி, தாரை தப்பட்டை முழங்க, தீர்த்தக் குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்றனர். அந்தந்த கோவில்களுக்கு சென்று, சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு, பொங்கல் வைக்கப்பட்டு படைக்கப்பட்டது.
பல்லடம்: பல்லடத்தில் உள்ள தண்டபாணி கோவில், பொங்காளியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
உடுமலை: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில், காமாட்சி யம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது; முக்கனிகளை படைத்து, மக்கள் வழிபட்டனர். திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், ஜல்லிப்பட்டி கரட்டுப்பெருமாள் கோவில், போடிப்பட்டி முருகன் கோவில்களில், நீண்ட வரிசையில் நின்று, தரிசனம் செய்தனர்.கிராம கோவில்களில் இருந்து, திருமூர்த்திமலை, தெய்வக்குளம் காளியம்மன் கோவில் உட்பட புண்ணிய தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, ஊர்வலமாக சென்று, அபிஷேகம் செய்தனர்.