பதிவு செய்த நாள்
16
ஏப்
2015
12:04
கோவை: மருதமலை முருகன் கோவிலில், நவீன இயந்திரத்தில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி துவங்கியது. இதனால், தயாரிப்பு மூன்று மடங்கு அதிகாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவையின் பழமையான மலைக்கோவில்களில் மருதமலை முருகன் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளியூரை சேர்ந்த ஏராளமானோர் வருவர். முருகனின் அறுபடை வீடுகளில் பஞ்சாமிர்தம் வழங்கப்படுவதைபோல, மருதமலையிலும் பஞ்சாமிர்தம் வழங்கப்பட வேண்டும் என, பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கைக்கு இணங்க, கடந்த ஆண்டு மருதமலையிலேயே பஞ்சாமிர்தம் தயாரித்து விற்பனை செய்து வந்தனர். குறைந்த அளவில் தயாரித்து விற்பனை செய்ததால், அவ்வப்போது, பஞ்சாமிர்த தட்டுப்பாடு ஏற்பட்டது. அதிகளவில் பஞ்சாமிர்தம் தயாரிக்க, கடந்த மாதம் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நவீன இயந்திரம் வாங்கப்பட்டது. இயந்திரங்கள் பொருத்தி, சோதனைப்பணிகள் நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் முதல், பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி துவங்கியது. மருதமலை கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பஞ்சாமிர்தம் தட்டுப்பாட்டை தவிர்க்க, நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. முந்தைய காலத்தில், ஒரு சில வேலைகள் மட்டுமே இயந்திரம் பயன்படுத்தி, செய்யப்பட்டு வந்தது. ‘தற்போது, பஞ்சாமிர்தம் தயாரிப்பு முழுவதுமாக இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பு, மூன்று மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றார்.