பதிவு செய்த நாள்
21
ஏப்
2015
01:04
ராசிபுரம்:வெண்ணந்தூர் சென்கான்காடு சக்தி விநாயகர் கோவிலில் நடந்த அகத்தியர் குருபூஜை மற்றும் மூலிகை யாகத்தில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.ராசிபுரம் அடுத்த, வெண்ணந்தூர், சென்கான்காட்டில் சக்தி விநாயர் கோவிலில் உள்ள அகத்தியர் ஸ்வாமிக்கு, சித்திரை மாதம் குருபூஜை விழா, கோலாகலமாக நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு விழா, நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. சக்தி விநாயகர், அகத்தியர் ஸ்வாமிக்கு எண்ணெய், பஞ்சாமிர்தம், சீகர்க்காய், பால், தயிர், இளநீர், மஞ்சள், திருநீரு உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், பல்வேறு வகையான அரிய வகை மூலிகைகளை, யாககுண்டத்தில் போட்டு சிறப்பு யாகம் நடத்தினர். மூலிகை யாகத்தினை, கல்லாறு தங்கராசன் அடிகளார் முன்னின்று நடத்தினார். இந்த மூலிகை வாசனை, நமது உடலில் செல்வதால், உடலில் உள்ள பல்வேறு விதமான உபாதைகள் குணமாகும் என்பதும், யாகத்தில் பங்கேற்றவர் அனைவருக்கும் தோசங்கள் நீங்கி, நீண்ட ஆயுள் பெறுவர் என்பது ஐதீகம். வெண்ணந்தூர், மின்னக்கல், வடுகம்பாளையம், அலவாய்பட்டி, நடுப்பட்டி, சவுதாபுரம் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.