பதிவு செய்த நாள்
27
ஏப்
2015
02:04
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம் வரும், 29ம் தேதி நடப்பதை முன்னிட்டு, தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில், நாயக்கர் மற்றும் மராட்டியர் ஆட்சிக் காலத்தில் சித்திரை பிரம்மோற்சவம் திருவிழா நடத்தப்பட்டது. இதில், 15ம் நாள் உற்சவமாக, தேரோட்டம் நடந்தது. இரண்டாம் சரபோஜி மன்னர், ஐந்து பெரிய தேர்களையும், நான்கு ராஜ வீதிகளில் தேர் முட்டிகளையும் அமைத்தார். கடந்த, 19ம் நூற்றாண்டுகளாக, பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நடக்கவில்லை. பக்தர்கள் வேண்டுகோளை ஏற்று, 2013ல் தமிழக அரசு, புதிய தேர் செய்ய, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. தற்போது, கட்டுமான பணி முடிந்து தேர் வெள்ளோட்டம், 20ம் தேதி நடந்தது.
தொடர்ந்து, தேரோட்டத்துக்காக, தேர் அலங்கரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதில், சவுக்கு மரங்கள் கட்டப்பட்டு, ஸ்வாமி வைப்பதற்கு ஏதுவாக மேடை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வண்ணங்களில் அழகிய வேலைப்படுகள் கொண்ட திரை சீலைகளால் தேர் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேல் பகுதியில் கலசம் வைக்கப்பட்டு, தேர் பிரம்மாண்டமாக கட்சி அளிக்கிறது. வரும், 29ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை, 5.30 மணிக்கு பிரகதீஸ்வரர் கோவிலிலிருந்து விநயாகர், சுப்பிரமணியர், தியாகராஜர் உடன் அம்மன், தனி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் தேர் மண்டபத்தை அடைகின்றனர். தொடர்ந்து, ஸ்வாமி அம்பாளுடன் தேருக்கு எழுந்தருள்வர். விநாயகருக்கு முன், மங்கள வாத்தியம் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் காலை, 6 முதல், 6.45 மணிக்குள் புதிய தேர் வடம் பிடிக்கப்படும். தேர்பவனி, நான்கு ராஜ வீதிகளில் பக்தர்கள் வசதிக்காகவும், ஸ்வாமி தரிசனம் மற்றும் அர்ச்சனைக்கு, மேல ராஜவீதியில் கொங்கணேஸ்வரர் கோவில், மூலை ஆஞ்சனேயர் கோவில், வடக்கு ராஜவீதியில் ராணி வாய்க்கால் சந்து எதிரில் உள்ள பிள்ளையார்கோவில், காந்தி சிலை அருகில் உள்ள ரத்தினபுரீஸ்வரர் கோவிலில் தேர் நின்று செல்லும். தொடர்ந்து, கீழ ராஜவீதியில் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கொடிமரத்து மூலை, அரண்மனை எதிரில் உள்ள விட்டோபா கோவில், தமிழ்ப் பல்கலைகழக அலுவலகம் அருகில் உள்ள மணிகர்ணிகேஸ்வரர் கோவில், நிக்கல் கூட்டுறவு வங்கி அருகில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், தெற்கு ராஜவீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோவில், இந்தியன் வங்கி அருகில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், தங்கசாரதா அருகில் உள்ள காளியம்மன் கோவில் ஆகிய இடங்களில் தேர் நிறுத்தப்படும் என, தஞ்சை ஹிந்துசமய அறநிலைத்துறை உதவி கமிஷனர் ரமணி தெரிவித்தார்.