வீரபாண்டி கோயிலில் முடி காணிக்கை செலுத்த கூடுதல் வசூல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2015 02:04
தேனி : வீரபாண்டி கவுமாரியமன் கோயில் சித்திரை திருவிழாவிற்காக சென்ற வாரம் கம்பம் நடப்பட்டது. நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்கள் தினமும் நூற்றுக்கணக்கானோர் கோயிலில் உள்ள கம்பத்திற்கு முல்லை ஆற்றில் இருந்து நீர் எடுத்து வந்து ஊற்றுகின்றனர். பக்தர்களின் வருகையால் திருவிழா களைகட்டியுள்ளது. திருவிழா மே 12 ல் துவங்குகிறது. அப்போது பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் பலர் இப்போதே கோயிலுக்கு வந்து ஆயிரம் கண்பானை எடுத்தல், முடிகாணிக்கை செலுத்துதல், அங்கப்பிரதட்சணம் செய்தல் என நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். இதனால் வீரபாண்டியில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவிழா களைகட்ட துவங்கினாலும் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதருவதில் சுணக்கம் காட்டிவருகிறது.
முடிகாணிக்கை செலுத்த கோயில் நிர்வாகம் ஒரு நபருக்கு ரூ.10 க்கு டோக்கன் வழங்குகின்றனர். ஆனால் முடி எடுக்கும் இடத்தில் ஒரு நபருக்கு ரூ.100 என கட்டாய வசூல் செய்கின்றனர். கோயில் நிர்வாக அலுவலகம் எதிரே பக்தர்கள் உட்காரும் மண்டபத்தில் குப்பை அதிகளவில் குவிகிறது. இதனை உடனுக்குடன் சுத்தம் செய்ய பணியாளர்கள் இல்லாததால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தற்காலிகமாவது கூடுதல் பணியாளர்களை கோயில் நிர்வாகம் நியமித்து கோயில் வளாகத்தில் தூய்மை காக்கவேண்டும். கோயிலில் பக்தர்களின் வசதிகளை கண்காணிக்க வேண்டிய கோயில் நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் கூடுதல் பொறுப்பாக குச்சனூர் சனீஸ்வரன் கோயில், ஜம்புலிபுத்தூர் கோயில்களை கண்காணிப்பதால் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் மட்டும் முழுகவனம் செலுத்த முடியவில்லை. வீரபாண்டி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரவும், முடிகாணிக்கைக்கு கூடுதல் வசூலை தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.