பதிவு செய்த நாள்
29
ஏப்
2015
11:04
செஞ்சி: செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோவிலில், பாரம்பரிய முறைப்படி எருமை கிடாக்களை பலியிட்டு, தேர் திருவிழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை ராஜகிரி மலை மீதுள்ள கமலக்கன்னியம்மனுக்கு, பல நுாறு ஆண்டுகளாக சித்திரை மாதம் தேர் திருவிழா நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு திருவிழா, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கமலக்கன்னியம்மன், ராஜகாளியம்மன், மாரிய ம்மனுக்கு தினமும் பொங்கலிட்டு, சிறப்பு அபிஷேகம் செய்து வந்தனர். இரவில் சுவாமி வீதி உலா நடந்து வந்தது. 9ம் நாள் திருவிழாவாக நேற்று காலை 1008 பால் குடங்களை ஊர்வமாக எடுத்து வரப்பட்டு, சாகை வார்த்தல் நடந்தது. பிற்பகல் 2:30 மணிக்கு கோட்டையில் உள்ள ராஜ காளிய ம்மனுக்கு பொங்கலிட்டு, பாரம்பரிய பூஜை செய்து, பூங்கரகம் மற்றும் திரிசூலம் எடுத்து வந்தனர். கோட்டையிலும், மந்தை வெளியிலும் எருமை கிடாக்களை பலியிட்டனர். மாரியம்மன், கமலக்கன்னியம்மன், திரிசூலத்துடன் தேர் பவனி துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பி டித்தனர். அப்போது, தானியம், காய்கறி, நாணயம் உள்ளிட்டவற்றை பக்தர்கள் தேர் மீது எறிந்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவையொட்டி, செஞ்சிக்கோட்டைக்கு பொதுமக்கள் சென்று வர இந்திய தொல்லியல் துறை இலவச அனுமதி வழங்கியது.