சின்னமனூர்: சின்னமனூர் சிவகாமியம்மன் கோயிலில் இன்று திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடக்கிறது. சின்னமனூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவகாமியம்மன் உடுனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை திருவிழா பிடாரியம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கும். முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. காலையில் சுவாமி, அம்பாள் அழைப்பு நடைபெறும். மணமேடையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறும். திருக்கல்யாணத்தை மகராஜா பட்டர் நடத்தி வைக்கிறார். வேதபாராயணம் வாசித்தல், தேவாரம், திருமறை ஓதும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும். நாளை தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு தேர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு தாலி, குங்குமம் வழங்கும் நிகழ்ச்சிக்கு மண்டப படிதாரர்களும், பல்வேறு சமூக அமைப்புகளும் ஏற்பாடு செய்துள்ளனர்.