சைதாப்பேட்டை: சைதாப்பேட்டை சிவசுப்ரமண்ய சுவாமி கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் நேற்று, ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். சைதாப்பேட்டை, வாத்தியார் சுப்பராய முதலி தெருவில் உள்ள, சிவசுப்ரமண்ய சுவாமி கோவிலில், ஏப்., 24 முதல், திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று காலை 6:00 மணிக்கு, ஆறாம் கால பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு, பிரதான யாக சாலையில் மகாபூர்ணாஹூதி தீபாராதனை கலச புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, 9:30 மணிக்கு அனைத்து விமானங்கள் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம்; தொடர்ந்து பஞ்சமூர்த்தி திருவீதியுலா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.