பதிவு செய்த நாள்
08
மே
2015
11:05
பாலி: ராஜஸ்தான் மாநிலத்தின், ஜோத்பூர் - பாலி நெடுஞ்சாலையில், பாலியில் இருந்து ஏறக்குறைய 20 கி.மீ., தொலைவில், இந்த வினோத கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் உள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் அருகில் உள்ள மரத்தை வழிபட்டால், சாலை விபத்துகளில் இருந்து ஓம் பன்னா பாதுகாப்பார் என்று இப்பகுதி மக்களும், வாகன ஓட்டுனர்களும் நம்புகின்றனர்.
யார் இந்த ஓம் பன்னாபாலி நகருக்கு அருகில் உள்ள சோட்டிலா கிராமத்தில் வசித்த, ஓம் பன்னா என்னும் ஓம் சிங் ரதவுட்டிடம் புல்லட் மோட்டார் சைக்கிள் இருந்தது. தினமும், இரவு நேரத்தில், பாலியில் இருந்து, தனக்கு பிரியமான புல்லட் மோட்டார் சைக்கிளில் கிராமத்திற்கு வருவது வழக்கம். கிராமத்திற்கு வரும் சாலையில், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் என்பதால், பன்னாவின் தந்தை தாகூர் ஜோக் சிங் ரதவுட், எச்சரித்து அனுப்புவார்.கடந்த 1991ம் ஆண்டு, கோடை காலத்தில், வழக்கம்போல் இரவு நேரத்தில், தனக்கு பிரியமான மோட்டார் சைக்கிளில் கிராமத்துக்கு வந்தபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பன்னா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை கைப்பற்றி, காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், அடுத்த நாள் காலையில், காவல் நிலையத்தில் இருந்த மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்ததைக் கண்ட போலீசார் திகைத்தனர். பன்னா இறந்த இடத்திலேயே மோட்டார் சைக்கிள் நின்றிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த தகவலையறிந்த கிராம மக்கள், பன்னாவையும், மோட்டார் சைக்கிளையும் தெய்வமாக கருதி வணங்கத் தொடங்கினர்.இந்த கோவிலுக்கு வந்து வணங்கிச் சென்றால், சாலை விபத்துகளில் இருந்து பன்னா பாதுகாப்பார் என்ற நம்பிக்கை கிராம மக்கள் மட்டுமின்றி, அந்த சாலை வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் உள்ளதால், கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.