பதிவு செய்த நாள்
04
ஜூலை
2011
11:07
ஜம்மு : நிலச்சரிவு, வாகன நெரிசல் காரணமாக, ஜம்முவில் இருந்து அமர்நாத்திற்கு பக்தர்களை யாத்திரை அனுப்புவது இரண்டாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோவிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க, கடந்த 29ம் தேதி முதல் நான்கு குழுக்கள் சென்றுள்ளன. இதுவரை 80 ஆயிரம் பக்தர்கள், பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக பால்தால் பாதையில் பக்தர்களை அனுப்புவது, கடந்த ஒன்றாம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது. பின், வானிலை சீரானதும் நேற்று முன்தினம் இப்பாதையில் பக்தர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்ததால், பால்தால் மற்றும் பகல்காம் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், இப்பாதைகளில் பக்தர்கள் பயணம் செய்வது நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து கட்டுப்பாட்டு அறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "நேற்று முன்தினம் இரவு கடும் மழை கொட்டியதால், பால்தால், பகல்காம் பாதைகளில் திடீரென நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பக்தர்கள் இந்த பாதைகள் வழியாக அமர்நாத் புனிதப் பயணம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பால்தால், சேஷ்நாக், பஜ்தாரணி, நுவான் உள்ளிட்ட பல்வேறு முகாம்களில் 60 ஆயிரம் பக்தர்கள் புனித யாத்திரை செல்ல காத்திருக்கின்றனர் என்றார். இதுதவிர, ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பக்தர்களின் வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரைக்கு முன்பதிவு செய்யாமல் வந்த 2,000 வாகனங்களால் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, பதான்கோட் - ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் இந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அமர்நாத் செல்வதற்காக ஜம்மு முகாமில், 30 ஆயிரம் பக்தர்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் செல்லும் பயணப்பாதையில் உள்ள லகான்பூரிலும், வாகனங்களை மறு உத்தரவு வரும் வரை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.
ஜம்மு முகாமில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பலத்த மழை மற்றும் அமர்நாத் குகை கோவிலில் கடும் நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, ஜம்மு முகாமில் இருந்து அமர்நாத்திற்கு பக்தர்கள் செல்வது இரண்டாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஜம்மு முகாமில் இருந்து புதியதாக யாத்திரை குழு நேற்று அமர்நாத்திற்கு புறப்படவில்லை என்றார். கூடுதல் ஹெலிகாப்டர் கட்டணம்: அமர்நாத் யாத்திரைக்காக அறிவிக்கப்பட்ட ஹெலிகாப்டர் கட்டணத்தை விட, 45 சதவீதம் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக அமர்நாத் யாத்ரீகர்கள் புகார் தெரிவித்துள்ளனர். "ஸ்ரீஅமர்நாத் கோவில் வாரியம் (எஸ்.ஏ.எஸ்.பி.,) அமர்நாத் யாத்திரைக்காக, ஹெலிகாப்டர் சேவையில் ஒரு நாளைக்கு 180 இருக்கைகளை ஒதுக்கி அறிவித்தது. அதன்படி, வழக்கமான பாதையான பாகல்காம் வழியில் செல்வதற்கு 6,900 ரூபாயும், பால்தால் வழியில் செல்வதற்கு 4,850 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஹெலிகாப்டர் சேவையைப் பயன்படுத்தும் யாத்ரீகர்கள்,"நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, 30ல் இருந்து 45 சதவீதம் அதிகமாக சுற்றுலா ஏஜன்ட்டுகள் வசூலிக்கின்றனர். பகல்காம் வழிக்கு 9,000 ரூபாயும், பால்தால் வழிக்கு 7,000 ரூபாயும் வசூலிக்கின்றனர் என்று புகார் கூறியுள்ளனர். காஷ்மீர் சுற்றுலா ஏஜன்ட்டுகள் அசோசியேஷன் தலைவர் அகமது பஞ்சாபி கூறுகையில், "யாத்ரீகர்கள் கேட்கும் சில சேவைகளைப் பொறுத்து, 10 சதவீதம் அதிகமாகக் கட்டணம் வசூலிக்கிறோம். வழக்கமான கட்டணத்தை விட 25 சதவீதம் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டது என, யாராவது நிரூபிக்க முடியுமா என, கேள்வி எழுப்பியுள்ளார்.