1871ல் சிகாகோவில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் ஹேராசியோ சபா போர்டு என்ற வழக்கறிஞர், தன் சொத்து முழுவதையும் இழந்தார். 1873ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில், அவரிடமிருந்த சேமிப்பும் கரைந்து விட்டது. ஏழ்மையான நிலையில், அவர் தன் மனைவி, நான்கு மகள்களுடன் ஐரோப்பா செல்வதற்காக கப்பலில் பயணச்சீட்டு வாங்கினார். ஆனால், தீ விபத்து பற்றிய விசாரணை காரணமாக அவரால் ஐரோப்பா செல்ல இயலவில்லை. மனைவியையும், மகள்களையும் மட்டும் அனுப்பி வைத்தார். பட்ட காலிலேயே படும் என்பது போல, அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட விபத்தில் கப்பல் கவிழ்ந்தது. அதில் போர்டின் மனைவி மட்டும் உயிர் தப்பினார். நான்கு மகள்களும் இறந்து விட்டனர். இதுகுறித்து போர்டின் மனைவி தன் கணவருக்கு தந்தி அனுப்பினார். இதன்பிறகு போர்டு ஐரோப்பா சென்றார். அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. சிறிது காலம் கழித்து அந்தக் குழந்தையும் காய்ச்சல் வந்து இறந்து விட்டது. அவர் சார்ந்திருந்த கிறிஸ்தவ சபையினர், கடவுளின் தண்டனையால் தான் இப்படி தொடர்ந்து துன்பம் ஏற்பட்டதாக போர்டை இகழ்ந்து பேசினர். ஆனால், போர்டு அதைக் கண்டு கொள்ளவில்லை. இவ்வளவு துன்பத்திலும் கடவுளை நிந்திக்கவில்லை. இட் இஸ் வெல் வித் மை சோல் என்னும் புகழ் பெற்ற பாடலைப் பாடினார். எல்லா விழாக்களிலும் அமெரிக்கர்களால் பாடப்படுகிறது இந்தப் பாடல்.என் ஆன்மாவிற்கு எல்லாம் நல்லது என்று தமிழாக்கம் செய்யப்பட்ட இப்பாடல் எல்லா சபைகளிலும் பாடப்படுகிறது. நமக்கு துன்பம் ஏற்படும் போது நம் மனநிலை மாறிப் போகிறது. யார் நம்மைத் தேற்றுவார்கள் என்று ஏங்குகிறோம். உதவிக்கு யாரும் வரவில்லையே என வருந்துகிறோம். உதவி கிடைக்காவிட்டால், கடவுளே இல்லை என்று கூச்சலிடுகிறோம். சிலர் தங்களுடைய உயிரைக் கூட மாய்த்துக் கொள்கின்றனர். சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கின பின்பு, கர்த்தர் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு வாக்குத் தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்,(யாக்கோபு1;12) என்கிறது பைபிள். ஹேராசியோ சபா போர்டு போல, எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் துவண்டு போகாமல், ஆண்டவரைப் பற்றிக் கொள்வோம். அவர் நமக்கு ஆறுதலளித்து காப்பாற்றுவார்.