பதிவு செய்த நாள்
13
மே
2015
02:05
அரசியல்வாதி என்பவர் மக்களின் நலன் மீது அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். அவ்வாறு அக்கறை வர வேண்டுமானால் அவர் நேர்மையும், அன்பும் கொண்டவராக இருக்க வேண்டும். அந்த அக்கறையை மனிதனுக்கு ஊட்டுவது மதம். எனவே, அரசியல்வாதி என்பவர் மதவாதியாக இருக்க வேண்டும். அரசியலுடன் மதம் கலக்காத போது தான் மக்கள் எண்ணற்ற கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். அரசியலுடன் மதம் கலக்கக்கூடாது என்று சொல்பவர்கள் போலி அரசியல்வாதிகள்.அவதார புருஷர்களையும், மகான்களையும் கவனியுங்கள். அவர்கள் மதத்தில் இருந்து கொண்டே அரசியலையும் கவனித்துள்ளனர். இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளை நாம் பார்க்கலாம். கிருஷ்ணர் ஒரு அவதாரம். அவர் அரசியலில் முக்கிய பங்கு வகித்துள்ளார். கங்கா புத்திரர் பீஷ்மர் ஒரு பெரிய மகான். அவர் அரசியல் வழிகாட்டியாக இருந்துள்ளார். சில மதங்கள் இறைவனை வழிபடும் முறைக்குக் கூட கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இப்படிப்பட்ட மதங்களால் ஒற்றுமையான சமுதாயத்தை உருவாக்க முடியாது. எந்த மதம் எல்லாவற்றையும் அரவணைத்துக் கொண்டு, எல்லா வழிகளிலும் பிரார்த்தனை செய்ய முழு சுதந்திரம் அளிக்கிறதோ அந்த மதத்தாலேயே, மக்களிடம் நேர்மையையும், அமைதியையும் ஏற்படுத்த தகுதியுடையது. அதுவே சமுதாயத்திற்கு தகுதியுடைய மதமாக இருக்கும். மக்களில் பலர் கூட அரசியலையும், மதத்தையும் தனித்தனியாக வைத்திருக்க வேண்டுமென எண்ணுகின்றனர். இதற்கு காரணம் சுதந்திரம் இல்லாத வழிபாட்டு முறைகள் தான். பல மதங்கள், மக்கள் எல்லாரிடமும் சமமான அக்கறை காட்டுவதில்லை. அவை சண்டையை வளர்க்கவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது வரலாறு காட்டும் உண்மை. அதுபோல, மதமல்லாத சமுதாய அமைப்புகள் சிலவும் குழப்பங்களையும், நேர்மையின்மையையும், லஞ்சத்தையும் உண்டாக்கியுள்ளன.இன்று அரசியல், மதம் இரண்டிற்கும் சீர்திருத்தம் தேவை. மதம் இன்னும் அகன்ற பரந்த கொள்கையுடையதாக, ஆன்மிகம் சார்ந்ததாக, வழிபாட்டு முறைகளுக்கு சுதந்திரம் அளிப்பதாக, உலகிலுள்ள மெய்யறிவு எல்லாவற்றையும் அரவணைத்து செல்வதாகவும், அகன்று பரந்ததாகவும் மாற வேண்டும். அரசியல்வாதிகள் இன்னும் அதிகமான நேர்மை உள்ளவராகவும், ஆன்மிகவாதியாகவும் ஆதல் வேண்டும்.
(மகான் ஸ்ரீ.ஸ்ரீ. ரவிசங்கர்ஜி)