பதிவு செய்த நாள்
14
மே
2015
11:05
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பூனையை சட்டியில் மூடி புதைத்து, அதன் மீது எருது விடும் வினோத நிகழ்ச்சி நடந்தது. சத்தியமங்கலம் அருகே உள்ளது கோடேபாளையம். இங்குள்ள கொளத்துமாரியம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம் எருது விடும் விழா நடப்பது வழக்கம். இந்த விழாவால், கால்நடைகள் நோயின்றி இருக்கும், கிராமம் செழிக்கும் என்பது நம்பிக்கை. இந்த விழாவையொட்டி, கொளத்துமாரியம்மன் கோவிலில், கம்பம் நடப்பட்டு விழா நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று, ஊர்கவுண்டர் வீட்டில் இருந்து, சட்டியில் மூடி வைக்கப்பட்ட பூனையை ஊர்வலமாக மேளதாளத்துடன் எடுத்து வந்தனர். கோவில் முன் இருக்கும் குழியில், அந்த பூனையுடன் சட்டியை வைத்து, மேலே மணல் மூலம் மூடிவிட்டனர். இந்த மணல் மீது அலங்கரிக்கப்பட்ட எருதை நடமாடவிட்டனர். இரண்டு மணி நேரத்துக்கு பின், குழியை தோண்டி பூனை இருக்கும் சட்டியை எடுத்து திறந்து பார்த்ததில் பூனை உயிருடன் இருந்தது. இதை கண்டதும், இக்கிராம பக்தர்கள் "மாரியம்மா, மாரியம்மா என்று கோஷமிட்டு மகிழ்ந்தனர். பூனை உயிருடன் இருந்ததால், இன்னும் இரண்டு ஆண்டுக்கு, இக்கிராமம் செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், வழிபாட்டை தொடர்ந்தனர்.