தலையில் கட்டிய ஈரத் துண்டுடன் வீட்டிலுள்ளவர்க்குப் பரிமாறுவதும், பூஜை அறையில் விளக்கேற்றுவதும் கூடாது. குடும்பப் பெண்கள் தலையை விரித்துப் போடக் கூடாது. குளித்துவிட்டு, தலைமுடி காயவில்லை என்றாலும், நுனியில் முடிச்சுப் போட்டு, பூ வைத்துக்கொள்ளலாம். காலை, மாலை விளக்கேற்றும்போது, ஓரிரு தெய்வப்பாடல்களையாவது பாடி, வழிபட்டு விளக்கேற்றுவது சிறப்பு. தெரிந்த சுலோகங்களை, தெய்வ நாமங்களைச் சொல்லியும் வழிபடலாம். விபூதிப் பிரசாதம் முதலானவற்றைப் பெறும்போது வலக்கையில்தான் வாங்க வேண்டும். அதேநேரம், சட்டென்று இடக்கைக்கு மாற்றி, பிறகு வலக்கையால் எடுத்துப் பூசுதல் கூடாது. திருக்கோயில்களில், சன்னிதிகளில் பெரியவர்களைக் கண்டால், அங்கே அவர்களுக்கு நமஸ்காரம் செய்வது முறையல்ல; அங்கே வணக்கத்துக்கு உரியவன் இறைவன் மட்டுமே!