பதிவு செய்த நாள்
18
மே
2015
11:05
மணப்பாறை: மணப்பாறை, வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். மணப்பாறையில் உள்ள பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில், வேப்பமரம் தல விருட்சமாக உள்ளதால், இங்கு எழுந்தருளியுள்ள அம்மன், வேப்பிலை மாரியம்மன் என அழைக்கப்படுகிறார். இக்கோவில் திருவிழா கடந்த ஏப்ரல், 26ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் துவங்கியது. மே, 3ம் தேதி காப்பு கட்டுதலை தொடர்ந்து, தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில், ராஜவீதிகளில் வலம் வரும் மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், பால் குட ஊர்வலம் நேற்று நடந்தது. காலை, 6 மணிக்கு பச்சை மூங்கில் மரத்தில் கொடியேற்றம் நடந்தது. பின்னர், வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க, பால் குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, ராஜவீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தனர். விழாவில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், பால் குடங்களை சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை, 9 மணிக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு, 10 மணிக்கு அம்மன் முத்துப்பல்லக்கில் திருவீதியுலா நடந்தது. பால்குட ஊர்வல விழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள், நற்பணி மன்றங்கள், வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.