பதிவு செய்த நாள்
05
ஜூலை
2011
11:07
ஸ்ரீநகர்:மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை, நேற்று மீண்டும் துவங்கியது. இந்நிலையில், "இடையூறு இல்லாத வகையில் யாத்திரையை ஏற்பாடு செய்வதில், மாநில அரசு தோல்வி அடைந்து விட்டது. சில அதிகாரிகள் யாத்திரையில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என, மாநில பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில், அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தைத் தரிசிப்பதற்கான பாத யாத்திரை, கடந்த 29ம் தேதி துவங்கியது.அமர்நாத் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, துவங்கிய நான்கு நாட்களில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள், அமர்நாத் பனிலிங்கத்தைத் தரிசித்துள்ளனர்.இந்நிலையில், மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவு காரணமாக, பாதயாத்திரை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஜம்மு, ஸ்ரீநகர் நெடுஞ்சாலை முழுவதும், பக்தர்கள் கூட்டம் தேங்கியது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், வாகனங்களை போலீசார் ஆங்காங்கு நிறுத்தி விட்டனர். இதனால், பல இடங்களில் யாத்ரிகர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டனர். இந்நிலையில், நேற்று முதல், யாத்திரை மீண்டும் துவக்கப்பட்டது. முதற்கட்டமாக, ஜம்மு பேஸ் கேம்ப்பில் இருந்த, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாத்ரிகர்கள், தங்கள் யாத்திரையைத் துவக்கினர்.அதேநேரம், முன்பதிவு செய்யாத யாத்ரிகர்களை யாத்திரை மேற்கொள்ள அனுமதிப்பதில்லை என, ஸ்ரீஅமர்நாத் கோவில் வாரியம் முடிவு செய்துள்ளது.