சிதம்பரம் நடராஜர் கோவில் தரிசனம் 2 மணிக்குள் முடிக்க முடிவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2011 11:07
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரும் 7ம் தேதி நடைபெறும் ஆனி திருமஞ்சன தரிசனத்தை மதியம் இரண்டு மணிக்குள் முடிக்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழா கடந்த மாதம் 28ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. தரிசனம் 7ம் தேதி நடக்கிறது. தரிசன விழாவை அமைதியுடனும், பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பல்வேறு வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக கோவில் செயல் அலுவலர், தீட்சிதர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆர்.டி.ஒ., இந்துமதி தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் சிவக்குமார், தாசில்தார் திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், கோவில் தீட்சிதர்கள் செயலர் ராஜகணேஷ், அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் சுகுமார் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், வெயில் தாக்கம் குறையாததால் தரிசனத்தை பக்தர்கள் பாதிக்காத வகையில் மதியம் 2 மணிக்குள் முடித்துக் கொள்வது. பொதுமக்களுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது. தரிசனத்தன்று சுகாதார வசதிகள், மருத்துவ முகாம் அமைப்பது. தீயணைப்பு, மின்துறை, நகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் இருக்க கேட்டுக் கொள்வது. அன்னதானம் செய்பவர்கள் கோவில் செயல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.